செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ள சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள்
செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ள சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள்
மானாமதுரை,
மானாமதுரையில் இருந்து வாரம் இருமுறை இயக்கப்பட்ட சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், மானாமதுரை பயணிகள் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிலம்பு எக்ஸ்பிரஸ்தமிழகத்தில் உள்ள ரெயில் சந்திப்புகளில் மானாமதுரை ரெயில் சந்திப்பு நிலையம் முக்கியத்துவம் பெற்றது. மேலும் மிகவும் பிரசித்த பெற்ற சுற்றுலா தலமான ராமேசுவரத்திற்கு ரெயில் மூலம் வர வேண்டும் என்றால், மானாமதுரை ரெயில் நிலையம் வந்து தான் செல்ல வேண்டும். அதனால் மானாமதுரை முக்கிய ரெயில் சந்திப்பாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டே மானாமதுரெயில் இருந்து சென்னைக்கு தனி ரெயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு மானாமதுரெயில் இருந்து சென்னைக்கு வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் மூலம் மானாமதுரை மட்டுமின்றி கமுதி, பரமக்குடி, பார்த்திபனூர், திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களும் பயன்பெற்றனர். சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதலாக இயக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
நீட்டிப்புஇந்தநிலையில் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை நெல்லை மாவட்டம் செங்கோட்டை வரை நீட்டித்து தென்னக ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. பொங்கல் திருநாள் முதல் சிலம்பு எக்ஸ்பிரஸ் செங்கோட்டையில் இருந்து இயக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சென்னையில் இருந்து புறப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில், மானாமதுரை சந்திப்பில் வெறும் 10 நிமிடம் மட்டுமே நிற்கும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. இதற்கு மானாமதுரை சுற்றுவட்டார பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோரிக்கைஏற்கனவே கூட்டம் அலைமோதும் இந்த ரெயிலை தற்போது செங்கோட்டை வரை நீட்டித்துள்ளதால், மேலும் கூட்டம் அதிகரிக்கும். அதுவும் செங்கோட்டை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் இந்த ரெயிலில் ஏறும்பட்சத்தில், மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பயணிகள் அமருவதற்கு இடம் கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்படுபவர். எனவே செங்கோட்டையில் இருந்து மானாமதுரை வழியாக கூடுதல் ரெயில் இயக்க வேண்டும் அல்லது மானாமதுரை பயணிகள் வசதிக்காக கூடுதல் முன்பதிவில்லாத, முன்பதிவு பெட்டிகளை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.