சேவல் சண்டை நடத்திய 10 பேர் கைது

தோகைமலை, சின்னதாராபுரத்தில் சேவல் சண்டை நடத்திய 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்கள், 13 சேவல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2017-01-15 23:00 GMT
தோகைமலை,

சேவல் சண்டை

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கழுகூர் ஊராட்சி மேலக்கம்பேஸ்வரம் பகுதியில் சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக தோகைமலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது பிள்ளப்பாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி(வயது 37), லாலாப்பேட்டை கொடிக்கால்தெருவை சேர்ந்த சந்திரசேகர்(26), தினேஷ்(24), கடவூர் ஜக்கம்பட்டியை சேர்ந்த கருணகிரிமுத்தையா(22), குளத்துப்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன்(40) உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கழுகூர் ஊராட்சி மேலக்கம்பேஸ்வரம் தென்புறம் உள்ள ஆத்துவாரியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியது தெரிந்தது.

பறிமுதல்

இதனை தொடர்ந்து பொன்னுசாமி, சந்திரசேகர், தினேஷ், கருணகிரிமுத்தையா, ராஜேந்திரன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்கள், உயிருடன் இருந்த 11 சேவல்கள், ரூ.4,560 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் 5 பேர் கைது

இதேபோல் சின்னதாராபுரம் அருகே உள்ள தும்பிவாடி பகுதியில் சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக சின்னதாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது தும்பிவாடி 5 ரோடு காலனி அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதியில் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த பாண்டியன்(55), சசிகுமார்(24), தும்பிவாடியை சேர்ந்த நாகராஜ்(42), பிரேம்குமார்(23), நவீன்(23) ஆகிய 5 பேர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியது தெரிந்தது. இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 சேவல்கள் மற்றும் ரூ.250 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்