டேனிஸ்பேட்டை அருகே பரபரப்பு மான்வேட்டைக்கு சென்ற 7 பேர் கும்பல் சுற்றிவளைப்பு

டேனிஸ்பேட்டை அருகே மான் வேட்டைக்கு நாட்டுத்துப்பாக்கிகளுடன் சென்ற 7 பேர் கொண்ட கும்பல்

Update: 2017-01-15 23:00 GMT

ஓமலூர்,

மான் வேட்டைக்கு சென்ற கும்பல்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த டேனிஸ்பேட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட உள்கோம்பை, பெலாப்பள்ளி கோம்பை, காஞ்சேரி காப்புக்காடு, கருவாட்டுபாறை, கணவாய்புதூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் மூங்கில் தோப்புகள் உள்ளன. இங்கு ஒப்பந்தத்தின் பேரில் கடந்த 2 மாதங்களாக நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான டன் மூங்கில் வெட்டப்பட்டு வருகிறது. இதனால் வனப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் வன விலங்குகளான மான், முயல், காட்டுப்பன்றி, காட்டெருமை போன்றவற்றிற்கு போதுமான தண்ணீர் மற்றும் இரை கிடைக்காததால், அவை அருகில் உள்ள விவசாய தோட்டத்திற்கு வருகின்றன. அவ்வாறு வரும் மான் மற்றும் காட்டுப்பன்றிகளை சிலர் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டும், கன்னி வைத்தும் வேட்டையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, டேனிஸ்பேட்டை வனச்சரகம் காஞ்சேரி கருவாட்டு பாறை பகுதியில் மான் வேட்டையாட 10–க்கும் மேற்பட்டவர்கள் ஒரு கும்பலாக நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றுவதாக டேனிஸ்பேட்டை வனச்சரகர் செல்வராஜிக்கு தகவல் வந்தது. அதன்பேரில் அவரது தலைமையில் வனத்துறையினர் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

7 பேர் தப்பிஓட்டம்

அப்போது கருவாட்டு பாறை வனப்பகுதியில் துப்பாக்கிகளுடன் நின்ற 7 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். உடனே, அந்த நபர்கள் தாங்கள் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கிகளை கீழே போட்டனர். பின்னர் அவர்கள், வனத்துறையினரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து அந்த கும்பல் விட்டுச்சென்ற 5 நாட்டுத்துப்பாக்கிகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக, வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், காஞ்சேரி பகுதியை சேர்ந்த வக்கீல் என்கிற சண்முகம், டேனிஸ்பேட்டை உள்கோம்பை பகுதியை சேர்ந்த ராஜா மற்றும் அடையாளம் தெரியாத 5 பேர் சேர்ந்து இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அதன்பேரில் வனத்துறையினர் அந்த கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்