கண் தெரியாத சேவலும் பாசக்கார மனிதரும்

கண் பார்வை பறிபோன சேவலுக்கு இரை கொடுக்கும் செந்தில்.

Update: 2017-01-14 02:50 GMT
சிலர் போட்டிகளில் வென்றெடுத்த தங்கள் சேவல் இறந்து விட்டால், அதன் கால்களை மட்டும் வெட்டி எடுத்து விட்டு, உடலை அடக்கம் செய்து விடுவார்கள். வெட்டி எடுத்த கால்களை வீட்டில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வார்கள். சேவல் சண்டைக்காரர்கள் யாரேனும் வீட்டுக்கு வந்தால் அவர்களிடம் சேவல் கால்களை காட்டி, பெருமிதமாக பேசிக் கொள்ளும் நிகழ்வு இன்றைக்கும் மறையவில்லை.

அந்தவகையில் பார்வைபறிபோன சேவலை, 2 ஆண்டுகளாக பராமரித்து வருகிறார் ‘சேவக்கார செந்தில்’. தேனி மாவட்டம், போடியை சேர்ந்தவர். அவருக்கு பெருமை தேடிக் கொடுத்தது அவர் வளர்க்கும் சேவல்கள் தான். இவர், கண் பார்வை பறிபோன தனது சேவலை, ஒரு குழந்தை போல் பராமரித்து வருகிறார். காலையில் சேவலை கூண்டில் இருந்து வெளியே எடுக்கிறார். அதன் உடலை தண்ணீரால் துடைத்து விடுகிறார். இரையை ஊட்டுகிறார். பார்வை பறிபோன சேவலால் தானாய் இரை தேட முடியாது என்பதால், அதற்கு முழு உதவிகளையும் இவரே செய்து வருகிறார்.

செந்தில் சொல்கிறார்:

“நான் 18 ஆண்டுகளாக சேவல் வளர்த்து வருகிறேன். என்னிடம் 10 சண்டைச் சேவல்கள் உள்ளன. சண்டை சேவலை நாங்கள் வேற்று உயிரினமாக பார்க்கவில்லை. எங்கள் வீட்டில் ஒரு அங்கமாக பார்க்கிறோம். இந்த கண் பார்வை பறிபோன சேவலுக்கு 5 வயது. 11 மாத குஞ்சாக இருக்கும் போதே இதற்கு பயிற்சி அளித்தேன். ஒரு வயதில் முதல் சண்டையில் களம் இறங்கியது. அந்த சண்டை வெற்றி, தோல்வி இன்றி முடிந்தது. தொடர்ந்து 5 முறை சண்டைக்கு களம் இறங்கி உள்ளது. இதில் ஒரு தடவை வெற்றி பெற்றது. 4 தடவை டிரா செய்தது. அந்த வகையில் தோல்வியை சந்திக்காத சேவல் இது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சேவலுக்கு தலையில் நீர்கோர்த்து திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதற்கு மருத்துவம் பார்த்த போதிலும், 2 கண்களிலும் பார்வை பறிபோய்விட்டது. அதன்பிறகு இதனை பராமரித்து விட்டேன். இந்த சேவல் எனக்கு கவுரவம் கொடுத்தது. எனவே, அதற்கு எப்போது மரணம் வருகிறதோ அதுவரை வாழட்டும் என அதனை பராமரித்து வருகிறேன். மனிதர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து பார்வையிழப்பை சரிசெய்து கொள்ள வசதி இருப்பது போன்று, சேவலுக்கு பார்வையிழப்பை சரி செய்ய வசதி இருந்தால், இந்த சேவலுக்கு மீண்டும் பார்வை கிடைப்பதற்கு கடன் வாங்கியாவது செலவு செய்வேன்”

மேலும் செய்திகள்