பெங்களூருவில் இருந்து சர்வதேச விமான நிலையத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படும்
பெங்களூருவில் இருந்து சர்வதேச விமான நிலையத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படும் என்று மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
பெங்களூரு,
பெங்களூரு நகரில் இருந்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைப்பது குறித்து மத்திய விமான போக்குவரத்து இணை மந்திரி ஜெயந்த்சின்காவுடன் பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில் மெட்ரோ ரெயில் கழக நிர்வாக இயக்குனர் பிரதீப்சிங்க கரோலா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் விமான நிலையத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைப்பது மற்றும் அதற்கு நிதி ஆதாரங்களை திரட்டுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–
சர்வதேச விமான நிலையத்திற்கு...பெங்களூரு நகரில் இருந்து சர்வதேச விமான நிலையத்திற்கு 30 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படும். இதற்காக 6 வழித்தடங்களை தேர்ந்தெடுத்து உள்ளோம். இதுகுறித்து பொதுமக்கள் தங்களின் கருத்தை தெரிவிக்க வசதியாக இணையதளத்தில் அந்த வழித்தட வரைபடத்தை வெளியிட்டுள்ளோம்.
இதில் பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் ஒரு வழித்தடத்தை தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம். இந்த திட்டத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
6 புறநகர் ரெயில்கள்இந்த திட்டத்திற்கு 50–க்கு 50 என்ற விகிதத்தில் மத்திய–மாநில அரசுகள் நிதி ஒதுக்கும். இதற்கு மத்திய மந்திரி ஜெயந்த்சின்கா ஒப்புதல் தெரிவித்து உள்ளார். பெங்களூருவில் முதல் கட்டமாக 6 புறநகர் ரெயில்கள் இயக்கப்படும். இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கப்படும். இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.