ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க கோரி திருச்சியில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 20 பேர் கைது
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி திருச்சியில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 20 பேரை போலீசார் கைது செய்தனர்
பொங்கல் பண்டிகை என்றாலே ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை போட்டிகளை பல்வேறு இடங்களில் இளைஞர்கள் நடத்துவார்கள். ஆனால் இந்த இரு போட்டிகளையும் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது. இதனையொட்டி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாயிகள், மாணவர்கள், சமூகஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
ரெயில் மறியல்இந்தநிலையில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி அனைத்திந்திய மாணவர் சங்கம் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த அந்த அமைப்பை சேர்ந்த சிவா தலைமையில் நிர்வாகிகள் திருச்சி கோட்டை ரெயில் நிலையத்துக்கு நேற்று பகல் திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என்று கோஷமிட்டப்படி ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த கோட்டை போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 20 பேரை கைது செய்து, வேனில் ஏற்றி சென்றனர்.
சேவல் சண்டைஇதேபோல் உறையூர் வண்டிக்காரத்தெரு பகுதியில் சிலர் சேவல்களுடன் திரண்டு வந்து திடீரென சேவல் சண்டை நடத்தினார்கள். சேவல் சண்டை நடத்த போலீசார் தடை விதித்துள்ள நிலையில் சேவல் சண்டை நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அவர்கள் கூறுகையில், “பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் சேவல் சண்டை நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக சேவல் சண்டை நடத்த போலீசார் அனுமதி மறுத்து வருகிறார்கள். இந்த ஆண்டு சேவல் சண்டை நடத்தப்படும், என்றும் அவர்கள் தெரிவித்தனர். உறையூர் பகுதியில் சேவல் சண்டை நடத்தப்படுவது குறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் அந்த பகுதிக்கு சென்று சேவல் சண்டையை நடத்தியது யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.