திருப்பூரில் தீ விபத்து: 35 வீடுகள் எரிந்து சாம்பல்

திருப்பூரில் நடந்த தீ விபத்தில் 35 வீடுகள் எரிந்து சாம்பலானது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.

Update: 2017-01-13 21:30 GMT
வாடகை வீடுகள்

திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவில் துரைசாமி, சின்னசாமி, ராஜாமணி ஆகியோருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ஓடு மற்றும் இரும்பு தகடுகளை கொண்டு மேற்கூரை அமைத்து வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். ஒரே வளாகத்தில் 6 வரிசையாக 35 வீடுகள் அங்கு இருந்தன.

இந்த வீடுகளில் பனியன் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள், வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.

தீ மளமளவென பரவியது

இந்தநிலையில், காலை 11 மணி அளவில் இந்த வளாகத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதை அருகில் இருந்தவர்கள் கவனித்து உடனடியாக திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அதிகாரி சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் அடுத்தடுத்த வீடுகளுக்கு தீ மளமளவென பரவியது. இதனால் எங்கும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

வீடுகளின் மேற்கூரையானது ஓடு மற்றும் இரும்பு தகடுகளால் அமைக்கப்பட்டபோதிலும், வீட்டை சுற்றிலும் ஓலைகளால் தடுப்புகள் வேயப்பட்டு இருந்தன. இதன்காரணமாக தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினார்கள். ஒரே வளாகத்தில் அருகருகே வீடுகள் இருந்ததால் 35 வீடுகளும் ஒரே நேரத்தில் பற்றி எரிந்தன.

35 வீடுகள் சாம்பல்

சுமார் 1 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ அணைக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட லாரிகள் தண்ணீர் கொண்டு வர பயன்படுத்தப்பட்டன. இருப்பினும் 35 வீடுகளுக்குள் இருந்த கட்டில், மெத்தை, பீரோ, தட்டுமுட்டு சாமான்கள், டி.வி., உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், ஒரு சைக்கிள், ஒரு தள்ளுவண்டி உள்பட அனைத்தும் எரிந்து சாம்பலானது. தீ விபத்து ஏற்பட்டபோது வீடுகளுக்குள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு தாசில்தார் நடராஜன், போலீஸ் உதவி கமிஷனர் மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

கதறிய தொழிலாளர்கள்

தங்கள் வீடுகள் எரிந்து சாம்பலான தகவல் அறிந்ததும் தொழிலாளர்கள் பதறி அடித்துக்கொண்டு அங்கு ஓடி வந்தனர். வீடுகளில் வைத்திருந்த பணம், நகை, தட்டுமுட்டு சாமான்கள் முற்றிலும் எரிந்ததை பார்த்து கண்ணீர் விட்டு கதறி துடித்தனர். அனைத்தையும் இழந்து தவித்த தொழிலாளர்கள் அனைவரையும் அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் குடும்பத்துடன் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் வருவாய்த்துறை சார்பில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்டுள்ளவர்களிடம் சேத விவரங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் சேகரித்தனர். சேத மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நிவாரணம் வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடும் செய்யப்படும் என்று தெற்கு தாசில்தார் நடராஜன் கூறினார். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து திருப்பூர் ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் அலறி அடித்து ஓட்டம்

35 வீடுகள் தீப்பற்றி எரிவதை பார்க்க அப்பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டனர். அப்போது வீடுகளுக்குள் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதைப்பார்த்ததும் அங்கு திரண்டு இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். மொத்தம் 4 கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. மற்ற வீடுகளில் இருந்த கியாஸ் சிலிண்டர்களை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்புடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

மேலும் செய்திகள்