பொங்கல் விழா கொண்டாட போலீஸ் அனுமதி மறுப்பு: கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டியில் கடந்த 36 ஆண்டுகளாக கிராம மக்கள் சார்பில் பொங்கல் விழா கொண்டாடி வருகின்றனர்.

Update: 2017-01-13 22:00 GMT

போடி

தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டியில் கடந்த 36 ஆண்டுகளாக கிராம மக்கள் சார்பில் பொங்கல் விழா கொண்டாடி வருகின்றனர். இதில் விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்குவது வழக்கம். கடந்த ஆண்டு பொங்கல் விழா நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை உபயோகிப்பது தொடர்பாக இரு பிரிவினரிடையே கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 70 பேரை கைது செய்தனர். இந்த ஆண்டு பொங்கல் விழா நடத்துவதற்கு ஒரு பிரிவை சேர்ந்த திருவள்ளுவர் மாணவர் மன்றம் சார்பில் போடி தாலுகா போலீஸ்நிலையத்தில் அனுமதி கேட்டனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இரு பிரிவினரும் ஒன்று சேர்ந்து விழா நடத்தினால் அனுமதி தருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை கண்டித்து ஒரு பிரிவினர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கருப்பு பேட்ஜ் அணிந்து, கையில் கருப்புக்கொடி ஏந்தி ஊர்வலமாக செல்ல முயன்றனர். தகவலறிந்த போலீசார் அங்கு வந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து கருப்பு பேட்ஜ் அணிந்து இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாடுவது என்று ஒரு பிரிவினர் முடிவு செய்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்