சென்னிமலையில் வீட்டில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம்

சென்னிமலையில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.

Update: 2017-01-13 21:45 GMT
தீ விபத்து

சென்னிமலையில் எல்லை மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 39). இவர் வீட்டின் எதிரிலேயே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சண்முகசுந்தரம் வீட்டை பூட்டிவிட்டு நேற்று மதியம் 1 மணி அளவில் தனது கடையில் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு அவருடைய தந்தை சுப்பிரமணி சென்றபோது வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

இதை பார்த்த அவர் ‘தீ’, ‘தீ’ என சத்தம் போட்டுள்ளார். உடனடியாக அவர் தனது மகன் சண்முகசுந்தரத்துக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து அவர் அங்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் ஓடுகளும் உடைந்து சிதறி கீழே விழுந்து கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும் சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

பொருட்கள் எரிந்து நாசம்

தகவல் கிடைத்ததும் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 450 லிட்டர் அளவுள்ள 45 சமையல் எண்ணெய் பெட்டிகள், சூட்கேசுகள், மின் விசிறிகள், கிரைண்டர், மிக்சி, பீரோ மற்றும் அதில் இருந்த துணிமணிகள், சில்வர் பாத்திரங்கள் என அனைத்தும் தீயில் எரிந்து சாம்பல் ஆனது. மேலும் சேமிப்பாக உண்டியலில் இருந்த பணமும் தீயில் எரிந்தது. மின் கசிவு அல்லது வீட்டில் உள்ள தீபம் கவிழ்ந்து அதன்மூலம் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்