கொடுமுடி அருகே வங்கி மேலாளர் தாயை கொன்று நகை கொள்ளை

கொடுமுடி அருகே வங்கி மேலாளர் தாயை கொன்று நகையை கொள்ளையடித்த கொலையாளிகள், போலீசார் தங்களை துப்பு துலங்காமல் இருக்க மிளகாய் பொடியை தூவி சென்று உள்ளனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– வங்கி மேலாளர் கொடுமுடியை அடுத்த ஊஞ்சலூர

Update: 2017-01-13 22:00 GMT
வங்கி மேலாளர்

கொடுமுடியை அடுத்த ஊஞ்சலூர் அருகே உள்ள கரட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி. இறந்து விட்டார். இவருடைய மனைவி ராமலட்சுமி (வயது 75). இவர்களுடைய மகன்கள் ராதாகிருஷ்ணன் (55), லட்சுமணன் (53).

ராதாகிருஷ்ணன் லாரி முகவராக வேலை செய்து வருகிறார். இவர் ராமலட்சுமியின் வீட்டின் அருகிலேயே தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார். லட்சுமணன், சிவகிரியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரில் லட்சுமணன் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். எனவே வீட்டில் ராமலட்சுமி மட்டும் தனியாக வசித்து வந்து உள்ளார்.

கதவு திறக்கப்படவில்லை

இந்த நிலையில் நேற்று காலை இவருடைய வீட்டுக்கு எதிரே உள்ள தெருக்குழாயில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ராமலட்சுமியை அழைத்து உள்ளனர். ஆனால் எந்தவித சத்தமும் கொடுக்காமல் இருந்ததுடன், வீடும் திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ராமலட்சுமியின் வீட்டில் இருந்த அவருடைய மகன் ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்தனர். உடனே அவர் ராமலட்சுமியின் வீட்டுக்கு வந்தார். வீட்டின் முன்பு இருந்த இரும்பு கிரில் கேட்டு கதவை திறந்து கொண்டு உள்ளே சென்ற அவர் வீட்டின் மெயின் கதவை தட்டினார். கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் திறந்திருந்த ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார்.

கொலை

அப்போது வீட்டின் உள்ளே அவருடைய தாய் ராமலட்சுமி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். மேலும் வீட்டின் பின்புற கதவும் திறந்து கிடந்ததையும் அவர் கண்டார். உடனே அவர் வீட்டின் பின்புறம் வழியாக வீட்டின் உள்ளே சென்றார். அப்போது ராமலட்சுமியை சுற்றிலும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. மேலும் அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலி, 2 பவுன் வளையல்கள் ஆகியவற்றை காணவில்லை.

எனவே வீட்டில் தனியாக ராமலட்சுமி இருந்ததை நோட்டமிட்ட கொலையாளிகள் நேற்று முன்தினம் இரவு அவருக்கு தெரியாமலேயே பின்புற வாசல் வழியாக நைசாக வீட்டின் வழியாக உள்ளே சென்று பதுங்கி கொண்டனர். நள்ளிரவில் ஊர் அடங்கிய பிறகு ராமலட்சுமி தூங்கி கொண்டிருந்தபோது அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை வீட்டின் உள்ளே பதுங்கி இருந்த கொலையாளிகள் பறிக்க முயன்று உள்ளனர். இதனால் தூக்கத்தில் இருந்து விழித்த ராமலட்சுமி, கொலையாளிகளுடன் போராடி உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த கொலையாளிகள் ராமலட்சுமியை ஏதோ ஒரு ஆயுதத்தால் தலையில் தாக்கி கொலை செய்து உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் ராமலட்சுமி சாய்ந்து கீழே விழுந்து பிணமானார்.

மிளகாய் பொடி தூவினர்

இதைத்தொடர்ந்து ராமலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 2 தங்க சங்கிலி மற்றும் 2 கைகளில் இருந்து 2 வளையல்கள் என மொத்தம் 6 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து கொலையாளிகள் தப்பி சென்று உள்ளனர்.

கொலையாளிகளுடன் போராடியதில் ராமலட்சுமியின் காதில் இருந்த ஒரு கம்மல் உடைந்து வீட்டின் உள்ளே கீழே விழுந்து உள்ளது. இன்னொரு கம்மல் காதிலேயே உள்ளது. ஆனால் கொலையாளிகள் அந்த கம்மலை எடுக்காமலேயே சென்றுவிட்டனர். கொலையாளிகள் வீட்டை விட்டு தப்பி செல்லும்போது போலீஸ் தங்களை துப்பு துலக்கி கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக ராமலட்சுமியை சுற்றிலும் மிளகாய் பொடியை தூவி உள்ளனர்.

மோப்ப நாய்

இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த மூதாட்டியின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். இதைத்தொடர்ந்து ராமலட்சமியின் உடலை கைப்பற்றி கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வைதேகி சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட வீட்டில் இருந்து வைதேகி மோப்பம் பிடித்தவாறு வீட்டின் பின்புறமாக சென்று அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் ஓடி நின்றது. மோப்ப நாய் நின்ற இடத்தில் எச்சில் வாழை இலைகள் கிடந்து உள்ளன. எனவே கொலை நடப்பதற்கு முன்போ அல்லது பின்போ வாழை இலையில் கொலையாளிகள் அங்கிருந்து சாப்பிட்டிருக்கலாம் என போலீசாருக்கு தெரியவந்தது.

பரபரப்பு

பின்னர் அங்கிருந்து அந்த நாய் சிறிது தூரம் ஓடி நின்று கொண்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதுமட்டுமின்றி கைரேகை நிபுணர்கள் சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொடுமுடி அருகே வங்கி மேலாளர் தாயை கொன்று 6 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவத்தால் கொடுமுடி அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்