ரவுடி ஸ்ரீதர் விற்ற ரூ.30 கோடி சொத்துக்கு சீல் வைப்பு சென்னை அமலாக்கப்பிரிவு நடவடிக்கை

ரவுடி ஸ்ரீதர் சென்னை தனியார் துணிக்கடைக்கு விற்ற ரூ.30 கோடி சொத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2017-01-12 23:57 GMT

காஞ்சீபுரம்,

ரூ.30 கோடி சொத்துக்கு சீல்

காஞ்சீபுரம் திருப்பருத்திகுன்றத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். சாராய வியாபாரியும், ரவுடியுமான இவர் மீது காஞ்சீபுரம் போலீசில் கொலை, கொலை முயற்சி, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டிலும் இவர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதனால் கோர்ட்டு பலமுறை அவரை ஆஜராக சம்மன் வழங்கியும் ஆஜராகாததால் அவரை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவித்தது.

தற்போது ஸ்ரீதர் வெளிநாட்டில் மறைந்திருப்பதாக கூறப்படுகிறது. காஞ்சீபுரம் காமராஜர் வீதியில் பஸ் நிலையத்திற்கு எதிரில் உள்ள 12 ஆயிரத்து 945 சதுர அடி கொண்ட சுமார் ரூ.30 கோடி மதிப்புள்ள சொத்தை ரவுடி ஸ்ரீதர் வாங்கி சென்னை பிரபல தனியார் துணிக்கடைக்கு விற்றுள்ளார். அந்த இடத்தை சென்னை அமலாக்க பிரிவு துணை இயக்குனர் ஆனந்தி உத்தரவின்பேரில் அதிகாரிகள் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டி நடவடிக்கை மேற்கொண்டனர்.

இது குறித்து காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறியதாவது:–

போலீஸ் பாதுகாப்பு

ரவுடி ஸ்ரீதர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதால் அவரது ரூ.160 கோடி மதிப்புள்ள சொத்துகளை சென்னை அமலாக்கத்துறையினர் கணக்கெடுத்து முடக்க உள்ளனர். அதன் ஒரு பகுதியாக இந்த இடத்தில் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

சீல் வைப்பு நடவடிக்கையின் போது பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


மேலும் செய்திகள்