சாலையில் மதுபாட்டிலை வீசியதால் தகராறு: 3 பேருக்கு அரிவாள் வெட்டு; தொழிலாளி கைது

சீர்காழியில் சாலையில் மதுபாட்டிலை வீசியதால் ஏற்பட்ட தகராறில் 3 பேரை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-01-12 23:04 GMT

சீர்காழி,

அரிவாள் வெட்டு

சீர்காழி ஈசானியதெரு வடக்கு மயான சாலை பகுதியை சேர்ந்தவர் அசோக்(வயது32). அதே பகுதியை சேர்ந்த புரட்சிவளவன், மணிகண்டன். சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளி விளையாட்டு மைதானம் செல்லும் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது சீர்காழி கீழமாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்த தொழிலாளி அலைகடல் ராஜா(40), அவரது சகோதரர்கள் செல்வம், வேலு மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன், கோகுல் ஆகியோர் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த அசோக் அருகே ஒரு மதுபாட்டிலை வீசினர். இதையடுத்து அசோக், அவர்களிடம் சென்று ஏன் சாலையில் மதுபாட்டிலை வீசுகிறீர்கள் என கேட்டுள்ளார். அப்போது இருதரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அலைகடல் ராஜா, வேலு, செல்வம், ஆனந்தன், கோகுல் ஆகிய 5 பேரும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் அசோக், புரட்சிவளவன், மணிகண்டன் ஆகிய 3 பேரையும் வெட்டினர்.

வலைவீச்சு

இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் உடனே சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுதுரை, சப்–இன்ஸ்பெக்டர்கள் ராஜீ, பாண்டியன், ரவி, பாஸ்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அலைகடல் ராஜாவை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான குற்றவாளிகளையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்