கர்நாடகத்தில் விரைவில் 16 ஆயிரம் போலீசார் நியமனம் மந்திரி பரமேஸ்வர் தகவல்

கர்நாடகத்தில் விரைவில் 16 ஆயிரம் போலீசார் நியமனம் செய்யப்பட உள்ளதாக மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

Update: 2017-01-12 22:44 GMT

மங்களூரு

25 புதிய ரோந்து வாகனம்

கர்நாடக அரசு சார்பில் தட்சிண கன்னடா மாவட்ட போலீசாருக்கு நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய அதிவேகமாக செல்லும் 25 ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மந்திரி பரமேஸ்வர் அரசு சார்பில் வாகனங்களை ஒப்படைத்தார். பின்னர் அந்த வாகனங்களின் ரோந்து பணியை கொடியசைத்து தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:–

போலீசாருக்கு வழங்கப்பட்டு உள்ள இந்த ரோந்து வாகனத்தில் நவீன தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளதால், குற்றம் நடக்கும் இடத்தை தெளிவாக தெரிந்து கொண்டு, அடுத்த 5 நிமிடத்தில் அங்கு வாகனம் செல்லும். பெங்களூருவில் குற்றச்சம்பவங்களை தடுக்க ஏற்கனவே 362 ரோந்து வாகனங்கள் போலீசாருக்கு வழங்கப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் பெங்களூருவுக்கு அடுத்தபடியாக மங்களூரு 2– வது பெரிய நகரம் என்பதால், இங்கு தற்போது ரோந்து வாகன சேவையை அறிமுகப்படுத்தி உள்ளோம்.

போலீசார் நியமனம்

இன்னும் 2 வாரத்தில் பெலகாவி, தார்வார், மைசூரு ஆகிய மாவட்டத்திற்கும் வழங்கப்படும். இந்த ரோந்து வாகனங்கள் 24 மணிநேரமும் பயன்பாட்டில் இருக்கும். இதனால் குற்றங்கள் நடப்பது குறையும். மாநில மக்களின் பாதுகாப்பு தான் அரசுக்கு முக்கியம். மாநிலத்தில் விரைவில் புதியதாக 16 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே கூடுதலாக 8 ஆயிரம் போலீசார் நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

பெலகாவி மாவட்டத்தில் வாலிபர் மீது தாக்குதல் நடத்திய பா.ஜனதா எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரியில் கல்லூரி விழாவில் நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் ஏ.பி.வி.பி. மாணவ அமைப்பை சேர்ந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கு சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பின் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சம்பள உயர்வு

மாநிலத்தில் உள்ள போலீசாருக்கு சம்பள உயர்வு வழங்குவது பற்றி குழு அமைத்து உள்ளோம். அந்த குழு இன்னும் 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும். அதன்பின் போலீசாருக்கு சம்பள உயர்வு வழங்குவது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்