மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை உடல் உறுப்புகளை தானம்

மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். தனது உடல் உறுப்புகளை தானம் செய்யும்படி பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்து உள்ளார்.

Update: 2017-01-12 22:45 GMT

செங்குன்றம்,


கல்லூரி மாணவர் தற்கொலை

சென்னை மாதவரம் பால்பண்ணை ரமணா நகரைச் சேர்ந்தவர் ரங்கராஜன். இவர், கே.கே.நகரில் இணையதள மையம் நடத்தி வருகிறார். இவருடைய மகன் ராஜாஜி (வயது 19). இவர், கொடுங்கையூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த ராஜாஜி, மாலை 4 மணியளவில் மாதவரம் பால்பண்ணை அருகே உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு மேல் ஏறினார். திடீரென அவர் மேலே இருந்து குதித்து விட்டார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

உடல் உறுப்புகள் தானம்

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார், மாணவர் ராஜாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது மாணவர் ராஜாஜியின் சட்டை பையில் இருந்து போலீசார் கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில் அவர், ‘‘எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. வாழ பிடிக்காததால் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்’’ என தனது பெற்றோருக்கு வேண்டுகோள் விடுத்து அந்த கடிதத்தில் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்