ரெயிலில் கடத்திய 5½ கிலோ கஞ்சா பறிமுதல் வாலிபர் கைது

களியக்காவிளை அருகே பாறசாலையில், ரெயிலில் கடத்தி 5½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-01-12 22:15 GMT
களியக்காவிளை,

கஞ்சா கடத்தல்


மதுரையில் இருந்து கொல்லத்துக்கு சென்ற ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கேரள ரெயில்வே போலீசார் களியக்காவிளை அருகே கேரள பகுதியான பாறைசாலை ரெயில் நிலையத்தில் வைத்து அந்த ரெயிலில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பயணிகள் மத்தியில் ஒரு வாலிபர், கையில் பையுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் அமர்ந்திருந்தார். அவரை போலீசார் பிடித்து சோதனையிட்ட போது அவரது பையில் 5½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கஞ்சா தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.

கைது


தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை நடத்திய போது அவர் காட்டாத்துறை பூவச்சல் பகுதியை சேர்ந்த சராபுதீன் (வயது 35) என்பது தெரிய வந்தது. பின்னர், போலீசார் அந்த வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்த 5½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கேரள ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்