ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது

ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2017-01-12 22:30 GMT
குழித்துறை,

பேட்டி

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டுக்கு அழுத்தம் கொடுத்து போராடுவது பாராட்டுக்குரியது. ஆனால், அதற்காக மத்திய அரசை குறை சொல்லாதீர்கள். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற வகையில்தான் மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஆனால், நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பு வேறு நடவடிக்கை எடுக்க முடியாது.

இப்போது, பிரதமரை பார்க்க சென்ற எம்.பி.க்கள் கடந்த மாதம் போய் பார்த்திருக்கலாமே?. இப்போது, மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் போராடலாம். ஆனால், மத்திய அரசை குற்றம் சொல்லாதீர்கள்.

காவிரி பிரச்சினை

காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படுகிறது. அந்த அரசு கர்நாடகத்தில் செல்வாக்கை இழந்து விட்டது. எனவே, காவிரி பிரச்சினையை வைத்து கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்வார்கள் என நினைக்கிறார்கள். டிஸ்மிஸ் செய்யப்பட்டால் அதன்மூலம் மீண்டும் அனுதாபம் பெற்று ஆட்சிக்கு வர நினைக்கிறார்கள்.

இனயம் துறைமுகம் வராமல் இருக்க சிலர் தூண்டிவிடுகிறார்கள். துறைமுகம் வராமல் போனால், முதலில் அந்த பகுதி மீனவர்களுக்கும், பின்னர் குமரி மாவட்ட மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

கன்னியாகுமரி-களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றுவது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், மாநில அரசுதான் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சான்றிதழ் வழங்கும் விழா

முன்னதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மார்த்தாண்டத்தில் நடந்த கைவினைஞர்கள் திறன் சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பாரதீய நகைத்தொழிலாளர்கள் சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். கிள்ளியூர் ஒன்றிய பா.ஜனதா மஸ்தூர் செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் முருகவேல் வரவேற்று பேசினார். மாவட்ட பொது செயலாளர் சூரிய நாராயணன், தலைவர் முரளி ஆகியோர் பேசினர்.

விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சான்றிதழ் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக அளவில் நம் நாட்டில் 65 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர். இளைஞர்களின் பணிகள் திறம்பட இருந்தால்தான் நாட்டில் நிலையான தன்மை அமையும். பிரதமர் மோடி இளைஞர்களின் திறன்களை வளர்க்க பயிற்சிகளை அளிக்க செயல்பட்டு வருகிறார். அனைத்து துறைகளிலும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கவும் திட்டமிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்