குஜிலியம்பாறை அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் அவதி
குஜிலியம்பாறை அருகே ஆழ்துளை கிணறுகளில் போதிய தண்ணீர் இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு
குஜிலியம்பாறை,
குடிநீர் தட்டுப்பாடுதிண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் மல்லப்புரம் கிராமம் உள்ளது. இங்கு 500–க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு மல்லப்புரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வாரச்சந்தை, கதிர் அடிக்கும் களத்து பகுதி மற்றும் தோப்பூர் உள்ளிட்ட 4 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெறப்படும் தண்ணீரை மேல்நிலை தொட்டியில் சேகரித்து கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் தெருக்களில் தண்ணீர் தொட்டிகள் மூலமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. அதே போன்று வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் வற்றி விட்டது. இதனால் மல்லப்புரம் பகுதியில் தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மல்லப்புரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 4 ஆழ்துளை கிணறுகளில், தற்போது 2 ஆழ்துளை கிணறுகளில் மட்டுமே தண்ணீர் உள்ளது.
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்ஆனால் அந்த பகுதியில் தற்போது வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. அத்துடன் அதில் இருந்து கிடைக்கும் தண்ணீர் போதுமானதாக இல்லை. இதனால் ஒரு குடும்பத்திற்கு 15 முதல் 20 குடங்கள் தண்ணீர் கிடைப்பதற்கு பதிலாக 6 குடங்கள் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது.
இந்த நிலையில் கிராமத்தில் மேடான பகுதியில் அமைந்துள்ள ஒரு சில வீடுகளுக்கு தண்ணீர் முறையாக செல்வதில்லை என தெரிகிறது. இதனால் அருகில் உள்ள தோட்டங்களுக்கு சென்று கிணறுகளில் இருந்து கிராம மக்கள் தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பகுதிக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கிராம மக்கள் கோரிக்கைஆனால் ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் இன்னும் ஒரு சில வாரங்களில் ஆழ்துளை கிணறுகளில் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் போகும். மேலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே போதிய குடிநீர் வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.