அரசு பள்ளி மாணவ, மாணவிகளை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்க அறிவியல் கண்காட்சி

அரசு பள்ளி மாணவ, மாணவிகளை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்கும் வகையில் திண்டுக்கல்லில் அறிவியல் கண்காட்சி நடந்தது

Update: 2017-01-12 23:00 GMT

திண்டுக்கல்,

அறிவியல் கண்காட்சி

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்கும் வகையில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் மூலம் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 100 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இந்த பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு புதிய அறிவியல் கண்டுபிடிப்பு உருவாக்க 8 தலைப்புகள் வழங்கப்பட்டன.

அதன்படி இயற்கை வளங்கள், இயற்கையின் விந்தை, நகரும் பொருட்கள், எந்திரங்களின் வேலை திறன், உயிரினம், உணவு, மூலப்பொருள், கணிதம் ஆகிய தலைப்புகளில் அறிவியல் கண்டுபிடிப்புகளை மாணவர்கள் உருவாக்கினர். இந்த புதிய அறிவியல் படைப்புகளின் கண்காட்சி, திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரியில் நடந்தது.

பரிசு

இதில் 100 பள்ளிகளில் இருந்தும் மாணவ, மாணவிகள் தங்களுடைய அறிவியல் படைப்புகளை கண்காட்சியில் பார்வைக்காக வைத்திருந்தனர். இந்த அறிவியல் கண்காட்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதேபோல் பள்ளி மாணவ, மாணவிகள் அவற்றை பார்வையிட்டனர். அப்போது கண்காட்சியில் இடம்பெற்ற கண்டுபிடிப்புகள் குறித்து மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.

இதையடுத்து கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல் பேராசிரியர்கள் 4 பேரை கொண்ட குழுவினர் சிறந்த அறிவியல் படைப்புகளை தேர்வு செய்தனர். அதில் ஒவ்வொரு தலைப்பிலும் சிறந்த 3 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றை உருவாக்கிய மாணவர் குழுவிற்கு முதல் பரிசாக ரூ.1,500, 2–ம் பரிசாக ரூ.1,000, 3–ம் பரிசாக ரூ.500 வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் மாலாமணிமேகலை, ஜாகிர்உசேன், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜேசுராஜ்பயஸ், எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி வளாக இயக்குனர் சந்திரன், பள்ளி முதல்வர் ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்