வனத்துறைக்கு சொந்தமான விறகு சேமிப்பு கிடங்கில் தீ விபத்து
கொடைக்கானல் ஆனந்தகிரி 4–வது தெருவில் வனத்துறைக்கு சொந்தமான விறகு விற்பனை நிலையம் செயல்பட்டு வந்தது.
கொடைக்கானல்,
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த விற்பனை நிலையம் மூடப்பட்டது. அதன்பின்னர் விறகு சேமிப்பு கிடங்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது வனப்பகுதியில் அனுமதியின்றி வெட்டப்படுகிற மரங்கள், மரப்பட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு அங்கு வைக்கப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மதியம் சேமிப்பு கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், அங்கு வைக்கப்பட்டிருந்த மரங்கள் கருகி சாம்பல் ஆயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.