திருவண்ணாமலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவண்ணாமலை,
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி, பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சங்கத்தினர் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஜல்லிக்கட்டு நடத்த ஆதரவு தெரிவித்தும், இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கோரியும், பசுக்களை தெய்வமாக வணங்குகிறோம், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்காவிட்டால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என கோஷங்கள் எழுப்பினார்கள். இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு 2 காளைகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டரிடம் மனுஅதேபோல் கலெக்டர் அலுவலகம் முன்பு திருவண்ணாமலை மாவட்ட தமிழர் பாரம்பரிய விளையாட்டு, மஞ்சு விரட்டு முன்னேற்றம் மற்றும் ரசிகர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் பாலா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் கமலன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.
தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரேவிடம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை நிர்வாகிகள் அளித்தனர்.