மாவட்டம் முழுவதும், பொங்கல் பண்டிகையையொட்டி பானை–கரும்பு விற்பனை விறுவிறுப்பு
பொங்கல் பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
தர்மபுரி,
பொங்கல் பண்டிகை
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (சனிக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சந்தைகள், மார்க்கெட் உள்பட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டன. பொங்கல் பண்டிகைக்கு தேவையான பானைகள், கரும்பு, மஞ்சள், வெல்லம், கோலப்பொடிகள், பூஜை பொருட்கள், கயிறுகள், மாட்டு கொம்புகளுக்கு தீட்டப்படும் வர்ணம் ஆகியவற்றின் விற்பனை படுஜோராக நடைபெற்றது.
அந்தந்த பகுதிகளில் கூடிய சந்தை மற்றும் சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த பொங்கல் பொருட்களை பொதுமக்கள், விவசாயிகள் கூட்டம், கூட்டமாக வந்து ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். தர்மபுரி நகரில் கடைவீதி, பெரியார் சிலை, சந்தை திடல் உள்ளிட்ட பகுதிகளில் பானைகள் விற்பனை நேற்று விறுவிறுப்பாக நடந்தது. பொங்கல் பானைகள் அளவின் அடிப்படையில் ரூ.50 முதல் ரூ.300 வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டன.
பூக்கள் விற்பனைகிராமப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பொங்கல் பானைகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். தர்மபுரியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரும்பு விலை சற்று அதிகரித்தது. ஒரு ஜோடி கரும்பு ரூ.70 மற்றும் ரூ.80 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பூக்கள் வரத்து அதிகரித்து உள்ளதால் அவற்றின் விலை குறைந்து உள்ளது. சாமந்தி பூ ஒரு கிலோ ரூ.80–க்கும், வெள்ளை சாமந்தி ரூ.180–க்கும், சாந்தினி சாமந்தி ரூ.80–க்கும் பட்டர் ரோஜா ரூ.180–க்கும் விற்பனை செய்யப்பட்டது.
பொங்கல் பொருட்களை வாங்க கடைவீதி உள்பட தர்மபுரி நகரின் முக்கிய வீதிகளில் நேற்று காலை முதல் இரவு வரை பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முக்கிய இடங்களில் போலீசார் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ஆடுகள் விற்பனைபொம்மிடியில் நேற்று வாரச்சந்தை கூடியது. இங்கு பூஜை பொருட்கள் மற்றும் ஆடு, மாடுகளுக்கு தேவையான அலங்கார பொருட்கள், கயிறு, பொங்கல் பானைகள், வண்ண, வண்ண பொடிகள், காய்கறிகள், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள், விவசாயிகள் வாங்கி சென்றனர். இதேபோல பொம்மிடி சந்தையூரில் கூடிய ஆட்டு சந்தைக்கு மலைப்பகுதியில் இருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கினர். ஆட்டு சந்தையில் சிறிய ஆடு ஒன்று ரூ.2 ஆயிரமும் பெரிய ஆடு ரூ.16 ஆயிரம் வரையும் விற்பனையானது.
இதேபோல் அரூர், பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பொங்கல் பண்டிகையையொட்டி பானை, கரும்பு, பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதனை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.