பெருங்களத்தூரில் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்

பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் உள்பட 2 ஆயிரம் பொதுமக்கள் பெருங்களத்தூரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். வீடுகளுக்குள் வெள்ளம் ப

Update: 2016-12-31 23:19 GMT

தாம்பரம்,

பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் உள்பட 2 ஆயிரம் பொதுமக்கள் பெருங்களத்தூரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள சதானந்தபுரம், பீர்க்கன்காரணை, வண்டலூர் மலைபகுதி, இரும்புலியூர் மற்றும் கிழக்கு தாம்பரம் விமானப்படை, புது பெருங்களத்தூர் பகுதிகளில் இருந்து மழை காலங்களில் ஏற்படும் வெள்ளம், ஜி.எஸ்.டி. சாலை மற்றும் ரெயில் பாதையை கடந்து இரண்டு கண் மதகு வழியாக பைபாஸ் சாலை, சர்வீஸ் சாலை வழியாக மேற்கு பகுதிக்கு வந்து பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை பேரூராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து கடும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்கு வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருங்களத்தூர் மற்றும் பீர்க்கன்காரணை பேரூராட்சி பகுதி மக்கள் கடந்த சில ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் கடந்த வெள்ளம் மற்றும் புயலின் போது இந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

உண்ணாவிரத போராட்டம்

இந்த நிலையில் மழை காலங்களில் குடியிருப்பு பகுதியில் ஏற்படும் வெள்ளத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி பெருங்களத்தூர் பெருமாள் கோவில் அருகில் மேற்கு தாம்பரம், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர் மக்கள் நல வாழ்வு கூட்டமைப்பு சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் கண்ணன் அவென்யூ, மீனாட்சி நகர், சக்தி நகர், தங்கராஜ் நகர், அன்னை இந்திரா நகர், டி.டி.கே.நகர், கிருஷ்ணா நகர், உமா நகர், ஸ்ரீராம் நகர், கணேஷ் நகர், ராஜேஸ்வரி நகர், ஜி.ஏ.அவென்யூ உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:–

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

முடிச்சூர் சாலையில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க தாம்பரம் நகராட்சி சார்பில் வெள்ள நீரை குடியிருப்பு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டதால் 3 மணி நேரம் மழை பெய்தாலே 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து அவதிப்பட்டு வருகிறோம். இதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இரும்புலியூர் இரண்டு கண் மதகு வழியாக வரும் மழை நீரை முழுவதுமாக தாம்பரம் சர்வீஸ் சாலை வழியாக முடிச்சூர் சாலையில் பாலம் அமைத்து அதனை கிஷ்கிந்தா சாலையில் உள்ள பாப்பான் கால்வாயில் சேர்க்க வேண்டும். மழைநீர் வெள்ள பாதிப்பை தடுக்க கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி புதுப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்