பெங்களூருவில் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் நகர்வலம் குண்டும், குழியுமான சாலைகளை சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு

பெங்களூருவில் நேற்று மந்திரி கே.ஜே.ஜார்ஜ் நகர்வலம் மேற்கொண்டார். அப்போது குண்டும், குழியுமான சாலைகளை சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மந்திரி நகர்வலம் பெங்களூரு வளர்ச்சித்துறை மந்திரியாக இருந்து வருபவர் கே.ஜே.ஜார்ஜ். இவர், நேற்று பெங

Update: 2016-12-31 21:11 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று மந்திரி கே.ஜே.ஜார்ஜ் நகர்வலம் மேற்கொண்டார். அப்போது குண்டும், குழியுமான சாலைகளை சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

மந்திரி நகர்வலம்

பெங்களூரு வளர்ச்சித்துறை மந்திரியாக இருந்து வருபவர் கே.ஜே.ஜார்ஜ். இவர், நேற்று பெங்களூருவில் நகர்வலம் சென்றார். அப்போது அவருடன் மாநகராட்சி மேயர் பத்மாவதி, மாநகராட்சி கமி‌ஷனர் மஞ்சுநாத் பிரசாத் ஆகியோர் உடன் சென்றார்கள். பெங்களூரு குமாரகிருபா பார்க், பேலஸ் ரோடு, குட்டதஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கே.ஜே.ஜார்ஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை அவர் பார்வையிட்டார்.

மேலும் அவர் நகர்வலம் சென்ற பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக காணப்பட்டன. உடனே அங்கிருந்த அதிகாரிகளை அழைத்த மந்திரி கே.ஜே.ஜார்ஜ், அந்த சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பது ஏன்? என்று கேட்டார். மேலும் அந்த சாலைகளை உடனடியாக சரி செய்யும்படியும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். பின்னர் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் நிருபர்களிடம் கூறியதாவது:–

தனி ஏஜென்சி தொடங்க முடிவு

பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் குடிநீர் குழாய்களை பதிக்கவும், பழுது பார்க்கவும் சாலைகளை தோண்டுகிறார்கள். அதுபோல, மின்வாரியமும் மின்சார வயர்களை பதிக்க சாலைகளில் குழிகளை தோண்டுகின்றனர். ஆனால் அந்த பணிகள் விரைந்து முடிக்கப்படுவதில்லை. மேலும் பணிகள் முடிந்த பிறகு சாலைகளில் தோண்டப்பட்ட குழிகளை மூடாமல் அப்படியே விட்டுவிட்டு சென்று விடுகிறார்கள். இதனால் தான் சாலைகள் குண்டும், குழியுமாகவும், பெரிய பள்ளத்துடனும் காணப்படுகின்றன.

இந்த பிரச்சினையை சரிசெய்ய சாலைகளில் குழி தோண்டுதல், மூடும் பணியை கவனித்துக் கொள்ள தனி ஏஜென்சி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அது மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும். அந்த ஏஜென்சியை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகளில் குழி தோண்டுதல், மூடுவது ஏஜென்சியின் பொறுப்பு ஆகும். இதற்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்கூட்டியே செலுத்த வேண்டும்.

இவ்வாறு மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

மேலும் செய்திகள்