வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் 25 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்

ஆண்டிப்பட்டி, வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், வைகை அணையின் நீர்மட்டம் 25 அடியாக குறைந்துவிட்டது. இதனால் மதுரை நகர் பகுதிக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. வைகை அணை நீர்ம

Update: 2016-12-31 22:30 GMT
ஆண்டிப்பட்டி,

வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், வைகை அணையின் நீர்மட்டம் 25 அடியாக குறைந்துவிட்டது. இதனால் மதுரை நகர் பகுதிக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

வைகை அணை நீர்மட்டம்

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை விளங்குகிறது. குறிப்பாக லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் ஒட்டு மொத்த மதுரை மாநகரத்திற்கும் வைகை அணை மட்டுமே குடிநீர் ஆதாரமாக உள்ளது.

தேனி மாவட்டத்தில் ஏற்கனவே தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றிவிட்டது. இதனால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 25.33 அடியாக இருந்தது.

வறண்ட வைகை ஆறு

அணைக்கு வினாடிக்கு 98 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து மதுரை மற்றும் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் மொத்த நீர் இருப்பு 218 மில்லியன் கனஅடியாக உள்ளது.

கடந்த ஆண்டு இதே நாளில் வைகை அணையின் நீர்மட்டம் 64 அடியாக இருந்தது. வைகை அணையின் தற்போதைய நீர்மட்டம் கடந்த ஆண்டை விட 38 அடி குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வைகை அணையின் பிரதான நீர்ஆதாரமாக விளங்கும் வைகை ஆறு வறண்டு மணல் மேடாக காட்சியளிக்கிறது.

குடிநீர் தட்டுப்பாடு

இக்கட்டான சூழ்நிலையில் வைகை அணைக்கு கைக்கொடுக்கும், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டமும் தற்போது 111 அடியாக சரிந்துள்ளது. தற்போதைய நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே வைகை அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து வருவது கவலை அளிக்கிறது. மேலும் இதே நிலை நீடித்தால் கோடைக்காலத்தில் மதுரை மாநகரத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகும்’ என்றனர்.

மேலும் செய்திகள்