வறட்சியால் கருகிப்போன பயிர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில், வறட்சியால் கருகிப்போன பயிர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கி உள்ளது. வறட்சி பிரதம மந்திரியின் பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் கீழ், ஏராளமான விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு காப்பீடு செய்துள்ளனர். இந்தநிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்க

Update: 2016-12-30 22:45 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில், வறட்சியால் கருகிப்போன பயிர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கி உள்ளது.

வறட்சி

பிரதம மந்திரியின் பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் கீழ், ஏராளமான விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு காப்பீடு செய்துள்ளனர். இந்தநிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் கருகிவிட்டன.

இதன்காரணமாக காப்பீடு செய்திருந்த விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை வேளாண்மை துறை, வருவாய்த்துறை மற்றும் புள்ளியியல் துறை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். அதன்படி திண்டுக்கல் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில், வேளாண் அதிகாரிகளுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது.

அறுவடை பரிசோதனை

கூட்டத்திற்கு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தங்கச்சாமி தலைமை தாங்கினார். புள்ளியியல் துறை உதவி இயக்குனர் மயில்சாமி முன்னிலை வகித்தார். அப்போது, மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் மகசூல் எவ்வளவு குறைந்துள்ளது என்பதை கணக்கிடுவது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக திரை அமைக்கப்பட்டு, புள்ளியியல் துறையினரால் வழங்கப்படும் ரேண்டம் எண் அடிப்படையில் அறுவடை பரிசோதனை செய்வதற்கான நிலத்தை தேர்ந்தெடுப்பது எப்படி? என்பது குறித்து விளக்கப்பட்டது.

மேலும், அந்த நிலத்தில் பயிரிடப்பட்டிருக்கும் பயிர்களை அறுவடை செய்தல். கடந்த ஆண்டுகளை காட்டிலும் தற்போது எவ்வளவு மகசூல் குறைந்துள்ளது என்பதை கணக்கிடும் வகையில், அறுவடை செய்யப்பட்ட தானியங்களை எடைபோட்டு பதிவு செய்தல். இவற்றை அறிக்கையாக தயார் செய்து ஆன்- லைனில் பதிவேற்றம் செய்வது மற்றும் புள்ளியியல் துறைக்கு அனுப்புவது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

காப்பீட்டு தொகை

இந்த அறிக்கையின் அடிப்படையில் எவ்வளவு மகசூல் குறைந்துள்ளது என்பது கணக்கிடப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி எந்தெந்த பயிர்களுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது முடிவு செய்யப்படும். அதன் அடிப்படையில் காப்பீடு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகையை வங்கி கணக்கு மூலமாக வழங்கும் என்று வேளாண் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்