சிறுத்தைப்புலி, காட்டுயானை நடமாட்டம் இருப்பதால் பர்லியார் வனப்பகுதி வழியாக பக்தர்கள் கவனமாக பாதயாத்திரைசெல்ல வேண்டும்

கொலக்கம்பை, சிறுத்தைப்புலி, காட்டு யானை நடமாட்டம் இருப்பதால் பர்லியார் வனப்பகுதி வழியாக பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்று வனத்துறை அதிகாரி வேண்டுகோள் விடுத்து உள்ளார். பக்தர்கள் பாத யாத்திரை நீலகிரி மாவட்டத்தில் மார்க

Update: 2016-12-30 23:00 GMT
கொலக்கம்பை,

சிறுத்தைப்புலி, காட்டு யானை நடமாட்டம் இருப்பதால் பர்லியார் வனப்பகுதி வழியாக பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்று வனத்துறை அதிகாரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

பக்தர்கள் பாத யாத்திரை

நீலகிரி மாவட்டத்தில் மார்கழி, தை மாதங்களில் குன்னூர், ஊட்டி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் சபரிமலை அய்யப்பன் கோவில், பழனி முருகன் கோவிலுக்கு விரதம் இருந்து மாலை அணிந்து பாத யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த ஆண்டும் பெரும்பாலானோர் விரதம் இருந்து பாத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக குன்னூர்,அருவங்காடு, சேலாஸ், தூதூர்மட்டம், அறையட்டி, அதிகரட்டி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக காட்டேரி, மரப்பாலம், பர்லியார், கல்லாறு மார்க்கமாக பழனி கோவிலுக்கு சென்று வருகின்றனர். காட்டேரியில் இருந்து கல்லார் வரை அடர்ந்த வனப்பகுதி வழியாக பக்தர்கள் நடந்து செல்கின்றனர்.

சிறுத்தைப்புலி, யானைகள் நடமாட்டம்

இது அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் வனப்பகுதியில் தற்போது வறட்சியான காலநிலை நிலவுவதாலும் அங்கு வசிக்கும் கரடி, காட்டுயானை, சிறுத்தைப்புலி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் தண்ணீர், உணவு தேடி ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயருகிறது.
இதனால் வனப்பகுதி வழியாக பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் மிகுந்த பாதுகாப்புடன் நடந்து செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லும் போதும் சாலையை வனவிலங்குகள் கடக்கிறதா? என்று பார்த்து செல்ல வேண்டும். இது குறித்து குன்னூர் வனத்துறை ரேஞ்சர் பெரியசாமி கூறும் போது:-

கவனமாக செல்ல வேண்டும்

வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகிறது. குறிப்பாக பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தனியாக செல்லக்கூடாது. அவர்கள் ஒரு குழுவாக செல்ல வேண்டும். வனப்பகுதியை ஓட்டி உள்ள சாலையில் நடந்து செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். வளைவு, திருப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள், செடிகளின் மறைவில் யானைகள் நிற்கிறதா? என்பதை கண்காணித்து கடக்க வேண்டும். இரவு நேரங்களில் அடர்ந்த வனப்பகுதி வழியாக பாத யாத்திரை செல்வதை பக்தர்கள் தவிர்க்கலாம்.

தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது பக்தர்கள் குழுக்களாக சாலையோரம் நடந்து செல்ல வேண்டும். இரவு நேரங்களில் ஒளிபிரதிபலிப்பான் ஆடைகளை அணிந்து கொண்டால் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களை அடையாளம் காண முடியும். மேலும் வனப்பகுதியில் செல்லும் போது அங்குள்ள வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்