தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் செஞ்சி அருகே பரபரப்பு

செஞ்சி அருகே தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் தட்டுப்பாடு செஞ்சி அருகே நங்கிலிகொண்டான் கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்ந

Update: 2016-12-30 19:24 GMT

செஞ்சி,

செஞ்சி அருகே தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் தட்டுப்பாடு

செஞ்சி அருகே நங்கிலிகொண்டான் கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு பொது குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் கிராமத்தை சேர்ந்த சிலர் முறைகேடாக பொதுக்குழாய்களில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்ததாக தெரிகிறது. இதனால் கடந்த சில வாரங்களாக இந்த கிராம மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் முறைகேடாக அமைக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை துண்டித்து, தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 50–க்கும் மேற்பட்டோர் தடையின்றி தங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யக்கோரி நேற்று காலை 10 மணி அளவில் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் செஞ்சி– திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும் அவர்கள் மறியலை கைவிடவில்லை.

இதையடுத்து செஞ்சி தாசில்தார் செல்வராணி, வளத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி ஆகியோர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுகுழாய்களில் முறைகேடாக அமைக்கப்பட்டிருந்த குடிநீர் இணைப்புகளை துண்டித்து, தடையின்றி குடிநீர் வழங்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை ஏற்ற கிராம மக்கள் காலை 10.20 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்