சங்கரன்கோவில் அருகே கார்–மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி டிரைவர் கைது

சங்கரன்கோவில் அருகே நேற்று கார்– மோட்டார்சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். இந்த விபத்து தொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2016-12-30 21:15 GMT
சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் அருகே நேற்று கார்– மோட்டார்சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். இந்த விபத்து தொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கார்–மோட்டார்சைக்கிள் மோதல்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பெரிய கோவிலான்குளம் இந்திரா காலனியை சேர்ந்தவர் சிங்கத்துரை (வயது 51). அதே பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் ஆறுமுகச்சாமி (41). இருவரும் டிரைவர்களாக வேலை பார்த்து வந்தனர். நேற்று மதியம் சங்கரன்கோவிலில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றுவிட்டு இருவரும் ஒரே மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். பெரியகோவிலான்குளம் விலக்கு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர்களின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதனால் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிங்கத்துரை, ஆறுமுகச்சாமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் சின்னக்கோவிலான்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவர் கைது

இந்த விபத்து தொடர்பாக சின்னக்கோவிலான்குளம் இன்ஸ்பெக்டர் சங்கரேசுவரன் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த ராஜபாளையம் செவல்பட்டி தெருவை சேர்ந்த பெருமாள்சாமி மகன் ஜெகதீச பெருமாள் (42) என்பவரை கைது செய்தார்.

விபத்தில் இறந்த சிங்கத்துரைக்கு மனைவியும், 3 குழந்தைகளும், ஆறுமுகச்சாமிக்கு மனைவியும் உள்ளனர்.

மேலும் செய்திகள்