அரையாண்டு விடுமுறை காரணமாக மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் குடிநீர் வசதி இல்லாததால் பாதிப்பு

அரையாண்டு விடுமுறை காரணமாக மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குடிநீர் வசதி இல்லாததால் அவர்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.

Update: 2016-12-30 00:05 GMT
மாமல்லபுரம்,

அரையாண்டு விடுமுறை காரணமாக மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குடிநீர் வசதி இல்லாததால் அவர்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.

சுற்றுலா பயணிகள்

சர்வதேச சுற்றுலா மையமாக மாமல்லபுரம் திகழ்கிறது. யுனெஸ்கோவால் உலக புராதன சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட பல்லவர் கால சிற்பங்களை கண்டுகளிக்க நாள்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் வந்து கண்டு களித்து செல்கின்றனர்.

மேலும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை பகுதிகளில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக குடிநீர் தொட்டியில் உள்ள குழாய்களில் குடிநீர் வராததால் சுற்றுலா பயணிகள் குடிக்க தண்ணீர் வசதியின்றி தவித்து வருகின்றனர். குறிப்பாக கடைகளில் அதிக விலை கொடுத்து குடிநீர் பாட்டில்களை வாங்கி குடிக்க வேண்டிய நிலைமை உள்ளது.

கூடுதல் குடிநீர் தொட்டிகள்

மேலும் கடந்த 12-ந்தேதி ஏற்பட்ட வார்தா புயலின்போது மாமல்லபுரத்தில் மின்வினியோகம் துண்டிக்கப்பட்ட போதும், ஒருசில பகுதிகளில் மட்டுமே பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கியது. மாமல்லபுரத்தில் பெரும்பாலான இடங்களில் தனியார் மூலமே பொதுமக்களுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. தனியார் ஒரு சிலர் இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வினியோகம் செய்தனர்.

குறிப்பாக மின்தடை ஏற்பட்ட 5 நாட்களுக்கும் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களே தங்கள் சொந்த பணத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இனி வரும் காலங்களில் பேரூராட்சி நிர்வாகம் கடற்கரை சாலை, ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளில் வசதிக்காக கூடுதல் குடிநீர் தொட்டிகள் அமைத்து குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், பயணிகள் கோரிக்கையாக உள்ளது. 

மேலும் செய்திகள்