புனேக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்ட ரூ.25 லட்சத்துக்கான 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் தொழில் அதிபர் உள்பட 2 பேர் கைது

புனேக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்ட ரூ.25 லட்சத்துக்கான 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தொழில் அதிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 2,000 ரூபாய் நோட்டுகள் வாரணாசியில் இருந்து நேற்று புனே ரெயில் நிலையத்திற்கு ஞானகங்கா எக்ஸ்

Update: 2016-12-29 23:18 GMT

மும்பை,

புனேக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்ட ரூ.25 லட்சத்துக்கான 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தொழில் அதிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

2,000 ரூபாய் நோட்டுகள்

வாரணாசியில் இருந்து நேற்று புனே ரெயில் நிலையத்திற்கு ஞானகங்கா எக்ஸ்பிரஸ் வந்து நின்றது. அந்த ரெயிலில் இருந்து பயணிகள் இறங்கி சென்றனர். அப்போது இரண்டு வாலிபர்கள் பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே போலீசாரை பார்த்ததும் பதற்றத்துடன் ஒதுங்கி சென்றனர்.

இதை கவனித்த போலீசார் சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து சோதனை செய்தனர்.

இதில் அவர்கள் கொண்டு வந்த பையில் கத்தை, கத்தையாக 2,000 ரூபாய் நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

மொத்தம் அதில் ரூ.25 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரெயில்வே போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழில் அதிபர் மனிஷ் உமாசங்கர் (வயது36) மற்றும், அவரது ஊழியர் பிரமோத் ஜெய்ஸ்வால் (24) என்பது தெரியவந்தது.

அந்த பணத்தை புனேயில் வியாபாரி ஒருவருக்கு கொடுக்க கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் வருமான வரித்துறையினருக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்