செஞ்சி அருகே 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்த இளம்பெண் கணவருடன் ஏற்பட்ட தகராறில் பரிதாப முடிவு

செஞ்சி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– கணவன்–மனைவி தகராறு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குறிஞ்சிபை கிராமத்தை சேர்ந்த

Update: 2016-12-29 17:39 GMT

செஞ்சி,

செஞ்சி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

கணவன்–மனைவி தகராறு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குறிஞ்சிபை கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் காண்டீபன்(வயது 32), கொத்தனார். இவருக்கும் வீரணாமூரை சேர்ந்த செல்வராஜ் மகள் செல்வி(27) என்பவருக்கும் கடந்த 2011–ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சுஜி(4), சுதா(2) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக காண்டீபன் சரியாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வீட்டில் இருந்த காண்டீபனிடம் வேலைக்கு செல்லாமல் ஏன் வீட்டிலேயே இருக்கிறீர்கள் என செல்வி கேட்டுள்ளார். இதனால் கணவன்–மனைவி இடையே மீண்டும் குடும்பத்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த செல்வி குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்த தாய்

இதையடுத்து அரளி விதையை அரைத்து தனது 2 குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். பின்னர் அவரும் அரளி விதையை சாப்பிட்டுள்ளார். இதில் மயங்கி விழுந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்வி மற்றும் அவரது 2 குழந்தைகளுக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வி நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து அவரது குழந்தைகள் 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து செல்வியின் தந்தை செல்வராஜ் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக செஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் செல்வி தனது குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்டரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட செல்விக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் போலீசார் திண்டிவனம் சப்–கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக 2 பெண் குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்