கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுப்பது குறித்து கூடுதல் டி.ஜி.பி. மாகாளி நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுப்பது குறித்து கூடுதல் டி.ஜி.பி. மாகாளி நேரில் ஆய்வு செய்தார். தொடர் விபத்துகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்பட முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ளன. இந்த சால

Update: 2016-12-29 23:00 GMT

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுப்பது குறித்து கூடுதல் டி.ஜி.பி. மாகாளி நேரில் ஆய்வு செய்தார்.

தொடர் விபத்துகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்பட முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ளன. இந்த சாலைகளில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் அடிக்கடி விபத்துகளும், உயிர் இழப்புகளும் நடந்து வருகின்றன.

குறிப்பாக கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இந்த ஆண்டு ஜூன் மாதம் மேலுமலை அருகில் நடந்த விபத்தில் 20 பேரும், ஜூலை மாதம் சின்னாறு அருகே நடந்த விபத்தில் 8 பேரும் பலியானார்கள். இவ்வாறு தொடர்ந்து நடைபெறும் விபத்துகளை தடுக்க காவல் துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கூடுதல் டி.ஜி.பி. மாகாளி

அதில் ஒரு பகுதியாக தமிழக கூடுதல் டி.ஜி.பி. மாகாளி நேற்று கிருஷ்ணகிரி வந்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த அவரை சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. நாகராஜன், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் வீரராகவன், தமிழரசி, ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன், கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காவல் துறை அதிகாரிகளுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற கூடுதல் டி.ஜி.பி. மாகாளி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நேரில் ஆய்வு

இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விபத்துகள் அதிகம் நடைபெறும் மேலுமலை, சின்னாறு, காவேரிப்பட்டணம் பிரிவு சாலை, திம்மாபுரம் கூட்டுரோடு உள்பட பல்வேறு இடங்களுக்கு கூடுதல் டி.ஜி.பி. மாகாளி நேரில் சென்று ஆய்வு செய்தார். அந்த பகுதிகளில் விபத்துகள் எதனால் நடந்தன. மேலும் விபத்துகளை தடுக்க எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆய்வின் போது, தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் நாராயணன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அசோகன், பழனிசாமி, ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் முத்துசாமி, கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராசு, சப்–இன்ஸ்பெக்டர் சுல்தான் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்