பின்னலாடை நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு திறன்மேம்பாடு பயிற்சிக்கு அனுமதிக்க வேண்டும்

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க அனுமதிக்க கோரி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் மத்திய மந்திரிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். திறன் மேம்பாட்டு பயிற்சி திருப்பூர் ஏற்றுமதியாளர

Update: 2016-12-28 22:15 GMT

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க அனுமதிக்க கோரி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் மத்திய மந்திரிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

திறன் மேம்பாட்டு பயிற்சி

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா எம்.சண்முகம் மத்திய திறன்மேம்பாட்டு துறை மந்திரி ராஜீவ் பிரதாப் ரெட்டிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:–

திருப்பூரின் ஏற்றுமதி தற்போது ரூ.23 ஆயிரம் கோடியாக இருந்து வருகிறது. இந்த ஏற்றுமதியை வருகிற 2020 ஆண்டிற்குள் ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்துவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதன் ஒரு பகுதியாக மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வர்த்தகத்தை மேம்படுத்த இது சிறந்த வழி என்பதால் திருப்பூர் தொழில்துறையினர் திறன்மேம்பாட்டு திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

அனுமதி அளிக்க வேண்டும்

இதன் மூலம் திறன்மிக்க புதிய தொழிலாளர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றனர். தொழில் நிறுவனங்களில் பணியாற்றி கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு, பணியாற்றும் பிரிவு மட்டும் இன்றி அனைத்து துறை பிரிவில் உள்ள தொழில் நுட்பத்தையும் கற்று கொடுத்தால் வர்த்தகம் மேம்படும்.

இதற்காக தொழிலாளர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி கொடுப்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இதனால் மத்திய அரசு தற்போது பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும். இது திருப்பூரில் வர்த்தகத்தை நிர்ணயித்த அளவு எட்டுவதற்கு உதவியாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்