சாலையை விரிவுப்படுத்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மும்முரம் 18 வீடுகள், 22 கடைகள் இடித்து அகற்றம்

மஞ்சூர் சாலையை விரிவுப்படுத்துவதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தேவர்சோலையில் 18 வீடுகள், 22 கடைகள் இடித்து அகற்றப்பட்டன. போக்குவரத்து நெரிசல் நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே பிக்கட்டி, எமரால்டு, பெங்கால்மட்டம், இத்தலார்,

Update: 2016-12-28 22:30 GMT

மஞ்சூர் சாலையை விரிவுப்படுத்துவதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தேவர்சோலையில் 18 வீடுகள், 22 கடைகள் இடித்து அகற்றப்பட்டன.

போக்குவரத்து நெரிசல்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே பிக்கட்டி, எமரால்டு, பெங்கால்மட்டம், இத்தலார், முத்தொரை பாலாடா, தேவர்சோலை உள்ளிட்ட கிராமங்களில் செல்லும் மெயின் ரோடு மிகவும் குறுகலாக காணப்படுகிறது. சாலையின் இருபுறமும் பல்வேறு வணிக நிறுவனங்களும், குடியிருப்புகளும் உள்ளன.

வணிக நிறுவனங்களை சேர்ந்தவர்கள் சாலையை ஆக்கிரமித்து தங்கள் வணிகத்துக்கு உரிய பொருட்களை வைத்ததால் சாலை மிகவும் குறுகலாக காட்சியளித்தது. சாலை குறுகியதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிபட்டு வந்தனர். மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

நோட்டீசு வினியோகம்

இந்த நிலையில் ஊட்டி–மஞ்சூர் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதை தொடர்ந்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையடுத்து மாநில நெடுஞ்சாலை துறையினர் ஊட்டி–மஞ்சூர் இடையே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தனர். இதையடுத்து சர்வே எடுத்து பார்த்ததில் நெடுஞ்சாலை துறையினருக்கு சொந்தமான இடத்தை பலர் ஆக்கிரமிப்பு செய்து இருப்பது தெரிய வந்தது. முதற்கட்டமாக மஞ்சூர் அருகே உள்ள தேவர்சோலை பஜாரில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு கடந்த வாரம் நெடுஞ்சாலை துறை சார்பில் நோட்டீசு வினியோகிக்கப்பட்டது. அந்த நோட்டீசில், ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றி கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது.

ஆக்கிரமிப்பு அகற்றம்

இதை தொடர்ந்து ஒருவார காலம் ஆகியும் ஆக்கிரமிப்பாளர்கள் யாரும் தங்கள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இதையடுத்து நேற்று நீலகிரி மாவட்ட நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் முருகன் உத்தரவின்பேரில் மஞ்சூர் அருகே உள்ள தேவர்சோலை பஜாரில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. இந்த பணியில் 2 பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. சாலையின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த 18 வீடுகள், 22 வணிக நிறுவனங்கள், 2 கோவில்கள், ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான நிழற்குடை, தண்ணீர் தொட்டிகள் அகற்றப்பட்டன.

இது குறித்து நெடுஞ்சாலை துறையினர் கூறும் போது, மஞ்சூர்–ஊட்டி இடையே ஆக்கிரமிப்பு அதிகரித்து உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுப்பதற்காகவும், சாலையை விரிவுப்படுத்துவதற்காகவும் ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும். தேவர்சோலையில் நோட்டீசு வினியோகித்த பிறகும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி தொடர்ந்து மும்முரமாக நடைபெறும் என்றனர்.

மேலும் செய்திகள்