தூத்துக்குடி அருகே பயங்கரம் கட்டிட மேஸ்திரி கொடூரமாக குத்திக்கொலை சினிமா காட்சி போல மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் துரத்திச் சென்று தாக்குதல்

தூத்துக்குடி அருகே, ‘சினிமா காட்சி’ போல கட்டிட மேஸ்திரியை மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்று பட்டாக்கத்தியால் கொடூரமாக குத்திக்கொலை செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கட்டிட மேஸ்திரி தூத்துக்குடி ராஜபாளையம் மாதாநகரை சேர்ந்த சின்னச்ச

Update: 2016-12-28 20:30 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே, ‘சினிமா காட்சி’ போல கட்டிட மேஸ்திரியை மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்று பட்டாக்கத்தியால் கொடூரமாக குத்திக்கொலை செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கட்டிட மேஸ்திரி

தூத்துக்குடி ராஜபாளையம் மாதாநகரை சேர்ந்த சின்னச்சாமி மகன் அரிகிருஷ்ணன்(வயது 35). இவர், கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவர் பணி செய்யும் இடத்தில் தங்கி வேலை பார்ப்பது வழக்கம். நேற்று தூத்துக்குடி அருகிலுள்ள வேப்பலோடையில் புதிதாக ஒரு வீடு கட்டுமான பணி தொடங்குவதாக இருந்தது. இங்கு தங்கி பணியாற்றுவதற்காக அரிகிருஷ்ணன் நேற்று காலை சுமார் 10 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். அப்போது, சமையலுக்கு தேவையான அரிசி, காய்கறிகள் மற்றும் ஒரு பையில் தேவையான உடைகளும் எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

பின்தொடர்ந்த மர்ம நபர்கள்

அவர் தாளமுத்து நகரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் வேப்பலோடை நோக்கி சென்று கொண்டு இருந்தார். அவருக்கு பின்னால் 3 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்றவுடன் அவர்கள், மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு அரிகிருஷ்ணனுக்கு ‘சிக்னல்’ கொடுத்துள்ளனர். அவர்களில் 2 பேர் கைகளில் பட்டாக்கத்திகளை வைத்திருந்துள்ளனர்.

இதனால் பதற்றம் அடைந்த அரிகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். தொடர்ந்து அவர்கள், கைகளில் பட்டாக் கத்திகளுடன் மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க அரிகிருஷ்ணன், ஏதாவது ஊருக்குள் சென்று விட முடிவு செய்து தன்னுடைய மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தியுள்ளார்.

சினிமா காட்சி போல...

கிழக்கு கடற்கரை சாலையில் ‘சினிமா காட்சி’ போன்று அரிகிருஷ்ணன் சென்ற மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து, மர்ம நபர்கள் பட்டாக் கத்திகளை ஆட்டியவாறு சென்றதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உயிருக்கு பயந்து பதற்றத்துடன் மோட்டார் சைக்கிளை செலுத்திக் கொண்டிருந்த அவர், கிழக்கு கடற்கரை சாலையில் ஓரத்தில் உள்ள பட்டினமருதூரில் இருந்து ஜக்கம்மாள்புரம் செல்லும் ரோட்டில் மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார். அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் அவர் வேகமாக சென்றுள்ளார்.

குத்திக்கொலை

ஜக்கம்மாள்புரம் ரோட்டில், அவரை விடாமல் துரத்தி வந்த மர்ம ஆசாமிகள், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அரிகிருஷ்ணனை மோட்டார் சைக்கிளுடன் மடக்கி பிடித்தனர். மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓட முயன்ற அவரை, சுற்றிவளைத்து நின்றவாறு பட்டாக்கத்தியால் இரு கைகளின் தோல்பட்டையில் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அரிகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் ரோட்டில் விழுந்து பரிதாபமாக இறந்தார். அப்போது காலை சுமார் 10.30 மணி இருக்கும் என கூறப்படுகிறது. கண்இமைக்கும் நேரத்தில் அவரை கொலை செய்த மர்ம நபர்கள், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மலிங்கம், இன்ஸ்பெக்டர் பிச்சையா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அப்போது திடீரென மழை பெய்யத் தொடங்கியதால், மோப்பநாய் திரும்பி சென்று விட்டது.

காரணம் என்ன?

இது குறித்து தருவைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ‘வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்ற அரிகிருஷ்ணன், வீட்டுக்கு அருகிலுள்ள தாளமுத்து நகர் முக்கிய வீதியில் நின்று கொண்டிருந்த சிலருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் தகராறை விலக்கி விட்டுள்ளனர். பின்னர், அவர் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் அவரை மற்றொரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர் முயன்ற நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால், அவருடன் தகராறு செய்தவர்கள் தான், துரத்தி சென்று கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த நபர்களை போலீசார் தேடிச் சென்றபோது தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது. தகராறுக்கு காரணம் என்ன? கொலை செய்யப்பட்டது ஏன்? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டிட மேஸ்திரியை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று பட்டாக் கத்தியால் சரமாரியாக நடுரோட்டில் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்