இந்தியாவிலேயே தமிழகம்தான், ஆராய்ச்சி படிப்பில் முதலிடத்தில் உள்ளது உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழன் பேச்சு

இந்தியாவிலேயே தமிழகம்தான், ஆராய்ச்சி படிப்பில் முதலிடத்தில் உள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில் கூறியதாவது:– வரலாற்று சாதனையை...

Update: 2016-12-28 20:45 GMT

நெல்லை,

இந்தியாவிலேயே தமிழகம்தான், ஆராய்ச்சி படிப்பில் முதலிடத்தில் உள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில் கூறியதாவது:–

வரலாற்று சாதனையை...

தமிழகத்தில் உயர் கல்வியும், தொழிற்கல்வியும் உயர வேண்டும் என்று மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா முழங்கினார். உயர் கல்வியில் தமிழகத்துக்கு ஒப்பற்ற வளர்ச்சியை ஏற்படுத்தி தந்தவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் உயர் கல்வியில் பல புத்தாக்கங்களை நடைமுறைப்படுத்தி இந்தியாவுக்கே முன்னோடியாகவும், முன் மாதிரியாகவும் திகழ்ந்தவர் ஜெயலலிதா.

இந்தியாவில் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் 2014–15ன் கணக்குப்படி 757 பல்கலைக்கழகங்கள், 29 ஆயிரத்து 506 கல்லூரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 58 பல்கலைக்கழகங்கள், 2,470 கல்லூரிகள் உள்ளன. இதில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 67 கல்லூரிகளை ஜெயலலிதா புதிதாக தொடங்கி வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

இந்திய அளவில் உள்ள கல்லூரிகள் எண்ணிக்கையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இதேபோல் படிக்கும் பெண்களின் எண்ணிக்கையில் இந்திய சராசரியான 22.7 சதவீதத்தையும் தாண்டி 42.7 சதவீதத்தை அடைந்து உள்ளது.

தூத்துக்குடி கன்னியாகுமரி போன்ற கடலோர மாவட்டங்களில் பின்தங்கிய பகுதிகளில் உள்ளவர்களும் உயர் கல்வி பெற வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதன் மூலம், அனைத்து மாவட்டங்களிலும், பின்தங்கிய ஏழை, எளிய மக்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே உயர் கல்வி கிடைக்கச் செய்ததன் மூலம் இந்த சாதனை எட்டப்பட்டு உள்ளது.

ஆதிதிராவிட மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கை விகிதம் இந்திய சராசரி 18.5 சதவீதத்தையும் தாண்டி, தமிழகத்தில் 33.7 சதவீதம் என்ற நிலையை அடைந்து உள்ளது. பழங்குடியின மாணவர்களின் இந்திய கல்வி சராசரி 12.2 சதவீதம், ஆனால் தமிழகத்தில் 32.5 சதவீதம் ஆகும். இதிலும் தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது.

ஆராய்ச்சி படிப்பில் முதலிடம்

உயர் கல்வித்துறையின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்கள் தேசிய அளவில் ஆராய்ச்சி பணியில் புகழ்பெற்று திகழ்கின்றன. குறிப்பாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆராய்ச்சித் துறையில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது, இது பாராட்டுக்குரியது.

தமிழ்நாட்டில் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பில் 18 ஆயிரத்து 535 பேரும், எம்.பில். ஆராய்ச்சி படிப்பில் 15 ஆயிரத்து 304 பேரும் பயில்கின்றனர். இந்த உயர்வான நிலை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

மற்ற எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு 7,456 பெண்கள் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பிலும், 10,173 பெண்கள் எம்.பில் ஆராய்ச்சி படிப்பிலும் சேர்ந்து படிக்கும் உன்னத நிலை தமிழ்நாட்டில் உள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் 2014–15 கணக்குப்படி உயரிய ஆராய்ச்சி படிப்பிலும், தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.

மென்பொருள் அடைகாப்பு மையம்

தென் மாவட்ட மாணவர்கள் எளிதில் வேலை வாய்ப்பை பெறுவதற்கு ஏதுவாக ஜெயலலிதா, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வாயிலாக, இந்திய மென் பொருள் தொழில் பூங்காவுடன் இணைந்து, ‘‘மென்பொருள் அடைகாப்பு மையம்’’ நிறுவித் தந்துள்ளார். மாணவ–மாணவிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 3 வளாகங்களின் காணொலி காட்சி வசதியுடன் கூடிய சிறப்பு வகுப்பறைகள், ரூ.1 கோடி நிதிஉதவியுடன் புல வளர்ச்சி மையம், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மென்பொருள், மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை நினைவை போற்றும் வகையில் திருஉருவ வெண்கல சிலை, மாணவர் மனமகிழ் மன்றம், உள் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.2½ கோடியும், உறுப்பு கல்லூரிகளுக்கு ரூ.75 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வாய்ப்பு வளங்களை மாணவ–மாணவிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பட்டம், பதக்கம் பெற்றுள்ள மாணவ–மாணவிகள் வாழ்வில் எல்லா நிலைகளிலும், தனித்துவம் மிக்கவர்களாக திகழ வேண்டும்.

இவ்வாறு தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

மேலும் செய்திகள்