இந்தியாவில் மின்னணு பரிவர்த்தனை சாத்தியமில்லை ப.சிதம்பரம் பேட்டி

இந்தியாவில் மின்னணு பரிவர்த்தனை சாத்தியமில்லை என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார். பேட்டி காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– தமிழகத்தில் உள்ள அனைத்து ம

Update: 2016-12-28 23:00 GMT

காரைக்குடி,

இந்தியாவில் மின்னணு பரிவர்த்தனை சாத்தியமில்லை என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

பேட்டி

காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மழையின்றி வறட்சி நிலவுகிறது. ஆங்காங்கே விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். நடப்பாண்டில் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வார்தா புயலால் கடும் சேதங்கள் ஏற்பட்டு 16 நாட்கள் ஆகிவிட்டது. மத்திய அரசு உடனடியாக இடைக்கால நிவாரண தொகையினை அறிவித்திருக்க வேண்டும். அதன்பின் சேதங்களை கணக்கீடு செய்ய குழுவை அனுப்பி அறிக்கை பெற்று நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் இதுவரை இடைக்கால நிவாரண தொகை ஒதுக்கவில்லை. இந்த விஷயத்தில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துவிட்டதாக நினைக்க தோன்றுகிறது.

பேரிழப்பு

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் மாற்றத்தால் நாடு ஸ்தம்பித்துபோய் உள்ளது. அனைத்து சிறு, குறு தொழில்களும் நசிந்துவிட்டன. காளையார்கோவிலில் உள்ள தேசிய பஞ்சாலை மூடிக்கிடக்கிறது. ரூ.15 கோடி மதிப்பிலான நூல்கள் தேங்கியுள்ளன. இதனால் சுமார் 500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கோவை, திருப்பூர் போன்ற இடங்களிலும் தொழில்கள் முடங்கின. ஆனால் இதைப்பற்றி அரசு கவலைப்படவில்லை. மாநிலத்தில் காய்கறி, பழம், பூ விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் பேரிழப்பை சந்தித்து வருகின்றனர். காரணம் பணமதிப்பு மாற்றம் தான்.

எந்த பயனும் இல்லை

நாட்டில் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி புழக்கத்தில் இருந்தது. இதில் 5 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் ஆகாது. இதனை கருப்பு பணம் என அறிவித்து, அதனை ஒழித்துவிட்டதாக கூறிவிடலாம் என்று பிரதமர் மோடி நினைத்துள்ளார். ஆனால் 14 லட்சத்து 32 ஆயிரம் கோடி டெபாசிட் ஆகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் நினைப்பது நடக்காது. மொத்தத்தில் இந்த திட்டத்தால் எந்த பயனும் இல்லை. வங்கிப்பணம் சிலருக்கு மட்டுமே செல்கிறது. இதனை மத்திய அரசால் தடுக்க முடியவில்லை. மத்திய அரசு முழுமையாக செயலிழந்து மிகப்பெரிய நிர்வாக கோளாறை ஏற்படுத்தி வருகிறது. வங்கிகளை கட்டுப்படுத்த முடியாத இவர்களால் எப்படி இந்தியாவை நிர்வாகம் செய்ய முடியும்.

மின்னணு பரிவர்த்தனை

நாடு முழுவதும் ஏ.டி.எம். மையங்கள் பூட்டிக்கிடக்கின்றன (காரைக்குடியில் பூட்டிக்கிடக்கும் ஏ.டி.எம். மையங்களை புகைப்படங்களாக காண்பித்தார்). இந்தியாவில் மின்னணு பரிவர்த்தனை என்பது சாத்தியமில்லை. வளர்ந்த வலிமையான செல்வாக்கு மிக்க நாடுகளில் கூட ரொக்க பரிவர்த்தனை உள்ளது. மின்னணு பரிவர்த்தனை என நம் நாட்டை ஆளுவோர் கூறுவது மக்களை திசை திருப்பும் முயற்சியாகும். கருப்பு பணத்தை ஒழிப்போம், கள்ள நோட்டுகளை ஒழிப்போம், லஞ்சத்தை ஒழிப்போம் என கூறிவிட்டு, தற்போது காசில்லாத சமுதாயம் அமைப்போம் என்கின்றனர். இவை சிந்தனை இல்லாமல், புரிதல் இல்லாமல், திட்டமிடுதல் இல்லாமல் எடுத்த முடிவுகளின் விளைவுகளாகும். ரொக்கமில்லாத பரிமாற்றத்தால் இதனை தொழிலாக செய்வோர் பயன்பெறுவர். 100 ரூபாய் நோட்டு ரொக்க பரிவர்த்தனை மூலம் எத்தனை பேரிடம் கைமாறினாலும் அதன் மதிப்பு அப்படியே தான் இருக்கும். அதன் சேவை மதிப்பு குறையாது. ஆனால் மின்னணு பரிமாற்றத்தில் ஒரு முறை மாற்றும் போது, அத்தொழில் நடத்தும் நிறுவனத்திற்கு ரூ.1.50 கமிஷனாக சென்றுவிடும். பெரிய பண பரிவர்த்தனைகளை இம்முறையில் செய்தால் தவறில்லை. ஆனால் சிறு பண பரிவர்த்தனைகளுக்கு இம்முறை ஏற்புடையது இல்லை. இதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவர். எனவே தான் உலகம் முழுவதும் இம்முறை ஏற்கப்படவில்லை.

பேட்டியின் போது சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுந்தரம், சுப்புராமன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாங்குடி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்