ஊத்துக்கோட்டை அருகே வாலிபர் தற்கொலை முயற்சி வழக்கில் 11 பேர் கைது

ஊத்துக்கோட்டை அருகே வாலிபர் தற்கொலை முயற்சி வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி 11 பேரை கைது செய்தனர். அடி–உதை ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெல்வாய் பகுதியை சேர்ந்தவர் விஜயகாந்த் (வயது 24) . இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு முக்க

Update: 2016-12-27 22:46 GMT

ஊத்துக்கோட்டை அருகே வாலிபர் தற்கொலை முயற்சி வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி 11 பேரை கைது செய்தனர்.

அடி–உதை

ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெல்வாய் பகுதியை சேர்ந்தவர் விஜயகாந்த் (வயது 24). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு முக்கரம்பாக்கம் காலனியை சேர்ந்த வாலிபர்கள் 5 பேர் வந்தனர். அவர்கள் புகையிலை பொருட்களை கேட்டனர். அதற்கு விஜயகாந்த் இங்கு புகையிலை பொருட்கள் விற்பது இல்லை என்று கூறினார். இதனால் அந்த வாலிபர்கள் கடைக்காரர் விஜயகாந்துடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த முரளி (24) என்பவர் பெட்டி கரைக்காரர் விஜயகாந்துக்கு ஆதரவாக வாலிபர்களை தட்டிக்கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் முரளியை அடித்து உதைத்தனர். அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் திரும்பி சென்ற 5 வாலிபர்களும், முக்கரம்பாக்கம் காலனியை சேர்ந்த மேலும் 15 பேருடன் சேர்ந்து முரளி வீட்டுக்கு சென்று மீண்டும் அவரை அடித்து உதைத்தனர். அவரது வீட்டை சூறையாடினர்.

11 பேர் கைது

முரளியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்த்தினர் ஓடி வந்தனர். அதற்குள் தாக்குதல் நடத்திய 20 பேரும் தப்பி ஓடி விட்டனர். இதனால் மனவேதனை அடைந்த முரளி தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்து (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு வெங்கல் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இது குறித்து ஊத்துக்கோட்டை சப்– இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் விசாரணை நடத்தி முக்கரம்பாக்கம் காலனியை சேர்ந்த சரவணன் (32), தேவன் (21), பிரதீப் (21), அப்பு (20), தேவா (23), ஜான்சன்ராகுல் (28), மதன் (23), வேலு (26), பாலாஜி (25), சதாசிவம் (50), 17 வயது சிறுவன் என்று 11 பேரை கைது செய்தார்.

அவர்கள் மீது கொலை முயற்சி, பயங்கர ஆயதங்களுடன் தாக்குதல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவர்களில் 17 வயது சிறுவன் செங்கல்பட்டில் உள்ள சிறார்கள் சீர் திருத்தபள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். மீதம் உள்ள 10 பேரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நெல்வாய் மற்றும் முக்கரம்பாக்கம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்