ரூபாய் நோட்டு செல்லாது திட்டத்தால் மக்கள்நல திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை நாராயணசாமி வேதனை

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரச்சினையினால் மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி வேதனை தெரிவித்தார். புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– எதிர்ப்பு

Update: 2016-12-27 23:15 GMT

புதுச்சேரி

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரச்சினையினால் மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி வேதனை தெரிவித்தார்.

புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

எதிர்ப்பு

மத்திய அரசு கொண்டுவந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினை நான் ஆதரிப்பதுபோன்று செய்திகள் வெளியாகி உள்ளன. இது முற்றிலும் தவறானது. இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட கடந்த நவம்பர் 9–ந்தேதி முதல் இதை நான் எதிர்த்து வருகிறேன்.

கருப்பு பணத்தை ஒழிக்க பல வழிகள் உள்ளன. அதை நான் தெளிவாக கூறியுள்ளேன். உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கூட்டுறவு வங்கிகளில் இருந்த பணம் எல்லாம் ரிசர்வ் வங்கிக்கு சென்றுவிட்டது.

வியாபாரம் குறைந்தது

கூட்டுறவு வங்கிகளில் பணம் இல்லாததால் விவசாயிகளுக்கு கடன் கொடுக்க முடியவில்லை. அதனால் அவர்கள் உரம், விதை வாங்கக்கூட நிதியில்லாமல் தவித்து வருகின்றனர். விளைந்த விவசாய பொருட்களைக்கூட வாங்க ஆளில்லை. சிறு வியாபாரிகளுக்கு ரூ.15 ஆயிரத்துக்கு நடந்து வந்த வியாபாரம் தற்போது ரூ.5 ஆயிரமாக குறைந்துவிட்டது.

பிரதமர் 86 சதவீத மதிப்பிலான பணத்தை செல்லாது என்று அறிவித்துள்ளார். அதாவது ரூ.14 லட்சம் கோடி செல்லாது என்று அறிவித்துவிட்டு இதுவரை ரூ.6½ லட்சம் கோடிதான் புழக்கத்தில் விட்டுள்ளனர். இதனால் வங்கிகளில் பணம் இல்லை. அதுமட்டுமில்லாமல் மக்களை குழப்பும் விதமாக மத்திய அரசு நாள்தோறும் ஒவ்வொரு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அதிகாரம் இல்லை

ஏ.டி.எம்.களில் நாளொன்றுக்கு ரூ.2 ஆயிரமும், வங்கிகளில் வாரந்தோறும் ரூ.24 ஆயிரமும் மட்டுமே எடுக்க முடியும் என்கிறார்கள். மக்கள் வரி செலுத்திய பணத்தைக்கூட எடுப்பதற்கு தடைவிதிக்க ரிசர்வ் வங்கிக்கோ, பிரதமருக்கோ அதிகாரம் இல்லை. இந்த அறிவிப்புகளால் அரசு ஊழியர்களால் சம்பள பணத்தைக்கூட வங்கியில் எடுக்க முடியவில்லை.

அரசினாலும் மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. ஈமச்சடங்கு நிதியைக்கூட தரமுடியவில்லை. இதனால் சுற்றுலா பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எந்த காலத்திலும் பிரதமர் நரேந்திரமோடி அறிவித்த இந்த திட்டத்தை நான் ஆதரிக்கவில்லை. அதேபோல் ரொக்கமில்லா பரிவர்த்தனையை நிறைவேற்ற முடியாது என்று கூறியுள்ளேன்.

கட்டமைப்பு இல்லை

அதற்கான கட்டமைப்பு நம் மாநிலத்தில் இல்லை. அதை உருவாக்கி தருமாறு கேட்டுள்ளேன். இதுதொடர்பாக இன்று (புதன்கிழமை) திருவனந்தபுரத்தில் நடக்கும் முதல்–அமைச்சர்கள் மாநாட்டில் வலியுறுத்துவேன்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்