லாரி திருடும் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது 2 லாரிகள் பறிமுதல்

சாலை ஓரம் நிற்கும் லாரிகளையும், லாரி டயர், பேட்டரிகளையும் திருடும் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 லாரிகள், 10–க்கும் மேற்பட்ட லாரி டயர்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரிகள் திருட்டு சென்னையை அடுத்த மாதவரம்

Update: 2016-12-27 22:22 GMT

செங்குன்றம்,

சாலை ஓரம் நிற்கும் லாரிகளையும், லாரி டயர், பேட்டரிகளையும் திருடும் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 லாரிகள், 10–க்கும் மேற்பட்ட லாரி டயர்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

லாரிகள் திருட்டு

சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை பகுதியில் இரவு நேரங்களில் சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகளும், லாரிகளில் இருக்கும் டயர்கள், பேட்டரிகள் போன்றவையும் அடிக்கடி திருடுபோவதாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, ஊர்குடி கிராமத்தை சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமான லாரி மஞ்சம்பாக்கம் 200 அடி சாலை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது திருட்டுபோனது. இதுகுறித்து குமார் மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் செய்தார்.

ஒருவர் சிக்கினார்

மாதவரம் துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில், மாதவரம் உதவி கமிஷனர் ஜெயசுப்பிரமணியம் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மாதவரம் பால்பண்ணை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகப்பட்டு பிடிக்க முயன்றனர்.

அதில் ஒருவர் சிக்கிக்கொண்டார், மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் அவர் செங்கல்பட்டை அடுத்த கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த மோசஸ்(வயது 23) என்பதும், தப்பி ஓடியவர் அதேபகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பதும் தெரியவந்தது.

4 பேர் கைது

இவர்கள் இருவரும் தான் லாரிகளையும், டயர், பேட்டரிகளையும் திருடிவந்தது தெரிந்தது. மோசஸ் கொடுத்த தகவலின்பேரில் திருடியவற்றை விற்க உதவியாக இருந்த தாம்பரம் சேலையூரைச் சேர்ந்த சங்கரலிங்கம்(27), காஞ்சீபுரத்தை அடுத்த திருமஞ்சேரியைச் சேர்ந்த ஏழுமலை(22), ஊரப்பாக்கத்தில் டயர் கடை நடத்திவரும் திருவேங்கடம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மோசசும் கைது செய்யப்பட்டார்.

இவர்களிடம் இருந்து 2 லாரிகளையும், 10–க்கும் மேற்பட்ட லாரி டயர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவான ராஜேசை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்