பாளையங்கோட்டையில் கால்நடை பராமரிப்புத்துறை உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் பெண்கள் கைக்குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்

கால்நடை பராமரிப்புத்துறை உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கைக்குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். உதவியாளர் பணியிடங்கள் தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகங்களில் 859 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ள

Update: 2016-12-27 21:15 GMT

நெல்லை,

கால்நடை பராமரிப்புத்துறை உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கைக்குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

உதவியாளர் பணியிடங்கள்

தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகங்களில் 859 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப்பணியிடங்களை நேரடியாக நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த பணியிடங்களுக்கு பல ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று முன்தினம் நேர்காணல் தொடங்கியது. வருகிற 30–ந்தேதிவரை நடக்கிறது. இந்த நேர்காணல் தமிழகத்தில் உள்ள 9 மண்டலங்களில் நடக்கிறது.

நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரத்து 342 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களை 5 பிரிவுகளாக பிரித்து 5 நாட்கள் நேர்காணல் நடத்தப்படுகிறது. நெல்லை மண்டலத்திற்கான நேர்காணல் நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. முதல் நாளில் 1300 பேர் கலந்து கொண்டனர்.

பெண்கள் கைக்குழந்தைகளுடன்

2–வது நாளான நேற்று காலை 9 மணிக்கு நேர்காணல் தொடங்கியது. இதில் கலந்து கொள்ள விண்ணப்பித்த இளம் பெண்கள் தங்களுடைய கைக்குழந்தைகளுடன் வந்து இருந்தனர். பலர் தங்களுடைய குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு நேர்காணலுக்கு சென்றனர். அப்போது அவர்களுடைய சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இந்த பணியிடத்திற்கான கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று இருந்தால் போதுமானது.

நேற்று நேர்காணலுக்கு வந்து இருந்த 1365 பேரில் பெரும்பாலானவர்கள் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள். இவர்களுடைய சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு அவர்களை சைக்கிள் ஓட்டிக்காட்ட சொன்னார்கள். இதில் கலந்து கொண்டவர்கள் சைக்கிள் ஓட்டி காட்டினார்கள்.

இதையொட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இன்றும் (புதன்கிழமை) தொடர்ந்து நேர்காணல் நடக்கிறது.

மேலும் செய்திகள்