காஞ்சீபுரம் அருகே ஷேர் ஆட்டோ மீது அரசு பஸ் மோதல்; சிறுமி பலி 6 பேர் படுகாயம்

காஞ்சீபுரம் அருகே ஷேர் ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 6 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அய்யப்பன் கோவில் பிரசாதம் சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 37). ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் தமிழ்

Update: 2016-12-26 22:30 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே ஷேர் ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 6 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

அய்யப்பன் கோவில் பிரசாதம்

சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 37). ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் தமிழ்ச்செல்வன் (10), மகள் காவ்யா (6). இவள், அங்கு உள்ள அரசு பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயன், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வந்தார். அய்யப்பன் கோவில் பிரசாதத்தை செய்யாறு அடுத்த செங்கம்பூண்டியில் உள்ள தனது பெற்றோருக்கு கொடுக்க விஜயன் தனது நண்பரான சக்திவேல் (28) என்பவரின் ஷேர் ஆட்டோவில் நேற்று முன்தினம் இரவு தாம்பரத்தில் இருந்து செங்கம்பூண்டிக்கு சென்றார். ஆட்டோவை சக்திவேல் ஓட்டினார்.

இவர்களுடன் விஜயனின் மகன் தமிழ்ச்செல்வன், மகள் காவ்யா மற்றும் உறவினர்கள் மணி, பழனி (50), விஷ்வா ஆகியோரும் சென்றனர்.

அரசு பஸ் மோதியது

காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு பாலாற்று பாலத்தில் ஷேர் ஆட்டோ சென்ற போது எதிரே திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக ஷேர் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதிய ஷேர் ஆட்டோ, மீண்டும் அரசு பஸ் மீது விழுந்தது. இதில் பஸ்சின் கீழ் பகுதியில் சிக்கிய ஷேர் ஆட்டோ நசுங்கி உருக்குலைந்தது. பஸ்சின் முன்பகுதியும் சேதம் அடைந்தது.

சிறுமி பலி

இதில் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த சிறுமி காவ்யா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள். மேலும் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த விஜயன் உள்பட 6 பேரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் பலியான சிறுமி காவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்