பெங்களூரு லால்பாக் பூங்காவில் கல் தூண் சரிந்து விழுந்து சிறுவன் சாவு செல்போனில் படம் எடுக்க போஸ் கொடுத்தபோது நடந்த பரிதாபம்

பெங்களூரு லால்பாக் பூங்காவில் கல் தூண் சரிந்து விழுந்து சிறுவன் உயிர் இழந்தான். செல்போனில் படம் எடுக்க போஸ் கொடுத்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. சிறுமி சாவு பெங்களூரு லால்பாக் மிகப் பெரிய பூங்கா ஆகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணி

Update: 2016-12-26 21:03 GMT

பெங்களூரு

பெங்களூரு லால்பாக் பூங்காவில் கல் தூண் சரிந்து விழுந்து சிறுவன் உயிர் இழந்தான். செல்போனில் படம் எடுக்க போஸ் கொடுத்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

சிறுமி சாவு

பெங்களூரு லால்பாக் மிகப் பெரிய பூங்கா ஆகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். மேலும் லால்பாக்கில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி நடைபெறும் மலர் கண்காட்சியை காண லட்சக்கணக்கானோர் வருவது உண்டு. கடந்த ஆண்டு(2015) சுதந்திர தினத்தையொட்டி லால்பாக்கில் நடந்த மலர் கண்காட்சியை பார்க்க சென்ற குருபிரசாத், சுகுணா தம்பதியின் 7 வயது மகள் வைஷ்ணவி தேனீக்கள் கொட்டியதால் உயிர் இழந்தாள்.

இந்த நிலையில், லால்பாக்கை சுற்றி பார்க்க பெற்றோருடன் வந்த ஒரு சிறுவன், அங்குள்ள கல் தூண் சரிந்து விழுந்ததில் பலியான மற்றொரு பரிதாப சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:–

பள்ளிக்கு விடுமுறை

பெங்களூரு ஸ்ரீராமபுரத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 6 வயதில் விக்ரம் என்ற மகன் இருந்தான். இவன், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வந்தான். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி விக்ரம் படிக்கும் பள்ளிக்கு அடுத்த ஆண்டு (2017) ஜனவரி 1–ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டு இருந்தது. பள்ளிக்கு விடுமுறை என்பதால் சிறுவன் விக்ரம் நேற்று தனது பெற்றோரிடம் வெளியே அழைத்து செல்லும்படி வற்புறுத்தியதாக தெரிகிறது.

இதையடுத்து, நேற்று மதியம் குமார், தனது மனைவி ரேவதி, மகன் விக்ரம் மற்றும் உறவினர்களுடன் லால்பாக்கை சுற்றிப்பார்க்க சென்றார். லால்பாக்கில் உள்ள பல்வேறு பகுதிகளை குமார் தனது குடும்பத்தினருடன் சுற்றி பார்த்தார். மதியம் 2.30 மணியளவில் குமார், தனது மனைவியுடன் லால்பாக்கில் உள்ள கடைக்கு சென்று ஜூஸ் வாங்குவதற்காக சென்றார். அப்போது தனது உறவினருடன், சிறுவன் விக்ரம் விளையாடினான்.

கல் தூண் சரிந்து விழுந்தது

அப்போது விக்ரமை, அவனது அத்தை செல்போனில் போட்டோ எடுத்த வண்ணம் இருந்தார். இதனால் போட்டோவுக்கு போஸ் கொடுக்க லால்பாக் உள்ளே இருந்த சிறிய கல் தூண் அருகே போய் விக்ரம் நின்றான். அந்த கல் தூணுக்கு மேல் பெரிய கல் ஒன்றும் வைக்கப்பட்டு இருந்தது. போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக அந்த கல் தூணை பிடித்தபடி விக்ரம் நின்றதாக தெரிகிறது.

இந்த நிலையில், எதிர்பாராத விதமாக அந்த கல் தூண் சரிந்து சிறுவன் மீது விழுந்தது. மேலும் கல் தூண் மேல் வைக்கப்பட்டு இருந்த பெரிய கல், விக்ரமின் தலையில் விழுந்து அமுக்கியது. இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த அவன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தான். இதை பார்த்து சிறுவனின் பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதார்கள்

. சிறுவன் சாவு

பின்னர் உயிருக்கு போராடிய விக்ரமை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்கள். அங்கு விக்ரமை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதை கேட்ட குமார், ரேவதி பதறி துடித்தார்கள். மேலும் தங்களது மகனின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.

இதுபற்றி அறிந்ததும் சம்பவம் நடந்த லால்பாக் பூங்காவுக்கும், தனியார் மருத்துவமனைக்கும் சென்று சித்தாபுரா போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் தனியார் மருத்துவமனையில் இருந்த விக்ரமின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்பத்தினர் குற்றச்சாட்டு

சிறுவனை பலி கொண்ட அந்த கல் தூண் மிகவும் சிறியது என்றும், அந்த தூணுக்கு மேலே பெரிய கல் வைக்கப்பட்டு இருந்ததால்தான் பாரம் தாங்காமல் அந்த தூண் சாய்ந்து விழுந்தது. மேலும் அந்த கல் தூண் போதிய பிடிமானம் இல்லாமல் இருந்ததாகவும், அதனால் போட்டோவுக்கு போஸ் கொடுத்த சிறுவன், கல் தூண் மேலே சாய்ந்ததால், அது சரிந்து விழுந்ததும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், சம்பவம் நடந்தது பற்றி அறிந்ததும் லால்பாக்கில் உள்ள ஊழியர்களோ, தோட்ட கலைத்துறை அதிகாரிகளோ அங்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் சிறுவன் மீது கல் தூண் விழுந்து உயிருக்கு போராடிய போது, லால்பாக்கில் இருந்த யாரும் அவனை காப்பாற்ற முன்வரவில்லை என்றும், அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததாகவும் சிறுவன் விக்ரமின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து சித்தாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லால்பாக்கை சுற்றி பார்க்க பெற்றோருடன் சென்ற சிறுவன் பலியான சம்பவம் பெங்களூருவில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்