வீடு புகுந்து மடிக்கணினி, செல்போன் திருட்டு கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் வீடு புகுந்து லேப்டாப், செல்போனை வாலிபர் ஒருவர் திருடிச்சென்றார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர். வீடு புகுந்து திருட்டு சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் பஜனை கோவில் தெ

Update: 2016-12-26 21:45 GMT

தாம்பரம்,

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் வீடு புகுந்து லேப்டாப், செல்போனை வாலிபர் ஒருவர் திருடிச்சென்றார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

வீடு புகுந்து திருட்டு

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முககுமார்(வயது 27). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் அவரது நண்பர் ரகு என்பவரும் தங்கி இருந்தார்.

நேற்று காலை 6 மணிக்கு சண்முககுமார் வீட்டை திறந்து வைத்து விட்டு கழிப்பறை சென்றார். ரகு தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம ஆசாமி அங்கு இருந்த மடிக்கணினி, செல்போன் மற்றும் விலை உயர்ந்த ‘டேப்லட்’ ஆகியவற்றை திருடி சென்று விட்டார்.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

மேலும், அருகில் உள்ள மற்றொரு வீட்டில் ஆறுமுகம் (27) என்பவர் தனது நண்பர் இசக்கி ராஜா என்பவருடன் தங்கி உள்ளார். அவரது வீட்டிற்குள் நுழைந்த அதே நபர் மடிக்கணினி மற்றும் செல்போனை திருடிக்கொண்டு தப்பிச்சென்று விட்டார்.

அந்த நபர் செல்போன் மற்றும் லேப்டாப்களை திருடிக்கொண்டு பஜனை கோவில் தெருவில் செல்வது அப்பகுதியில் உள்ள தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜோதிக்குமாரின் வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த பதிவுகளை வைத்து சேலையூர் போலீசார் ஆறுமுகம் மற்றும் சண்முககுமாரிடம் புகாரை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் பலி

* குரோம்பேட்டை நியூ காலனி பகுதியை சேர்ந்த அந்தோணிராஜ் (18), குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பாலம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்றபோது, சாலை தடுப்புச்சுவரில் மோட்டார்சைக்கிள் மோதியதில் உயிரிழந்தார்.

* அம்பத்தூர்–மதுராமேட்டூர் சாலையில் உள்ள சூரப்பட்டு சிவப்பிரகாசம் நகரை சேர்ந்த ரசியா பேகம் (50) என்பவரது பஞ்சு மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

* பாரிமுனை காந்தி நகர் பகுதியை சேர்ந்த ராகுல் (19) தனது நண்பர் ஆட்டோவில் பல்லவன் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கன்டெய்னர் லாரி ஆட்டோ மீது மோதியதில் அவர் பலியானார். இதுதொடர்பாக லாரி டிரைவர் பீகாரை சேர்ந்த சபீர் (28) கைது செய்யப்பட்டார்.

கல்லூரி மாணவி தற்கொலை

* உடல்நலக்குறைவால் மனமுடைந்த வேளச்சேரி தரமணி பாரதியார் நகரை சேர்ந்த கல்லூரி மாணவி நிர்மலா (19) தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

* கடந்த 23–ந்தேதி ஆவடி காமராஜ் நகரில் உள்ள ஒரு பிரியாணிக்கடை உரிமையாளர் முகமது இக்பால் (34), அவரது அண்ணன் முகமது பாரக் (42) மற்றும் ஊழியர் ரகமத்துல்லா (34) ஆகிய 3 பேரை தாக்கிவிட்டு தலைமறைவான ராஜேஷ் (28), டேனிஷ் டொனால்டு (23), ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சிரஞ்சீவியை தேடி வருகின்றனர்.

* கோட்டூர்புரம் ஜிப்சி காலனியை சேர்ந்த சுரேஷ் (23) என்பவரது வீடு நேற்று முன்தினம் இரவு தீப்பிடித்து எரிந்தது. குடிசை வீட்டின் அருகே உள்ள மின் இணைப்பு பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தாலிச்சங்கிலி பறிப்பு

* மாதவரம் தபால்பெட்டி அருகே நடந்து சென்ற சங்கீதா (32) என்பவரிடம் 7 பவுன் தாலிச்சங்கிலியை மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் பறித்துச்சென்றனர்.

* அரசின் முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரி 50–க்கும் மேற்பட்டோர் பாடி கொரட்டூர் படவத்தம்மன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

* நங்கநல்லூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த சுரேஷ் (21) என்பவரது மோட்டார் சைக்கிளை திருடியதாக, கிண்டியை சேர்ந்த ஜான்பால் (22) கைது செய்யப்பட்டார்.

* கே.கே.நகர் போப்பிலிராஜா சாலையில் வசிக்கும் பால்ராஜ் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்கநகைகள், ரூ.10 ஆயிரம் மற்றும் 1 கிலோ வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

இதேபோல் ஐஸ்அவுஸ் பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்பவரது வீட்டிலும் 20 பவுன் தங்கநகைகள் திருட்டு போனது.

மேலும் செய்திகள்