சின்னமனூர் அருகே, தகாத உறவுக்கு மறுத்த மாணவனை கிணற்றில் தள்ளி விட்ட கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

சின்னமனூர் அருகே தகாத உறவுக்கு மறுத்ததால், ஆத்திரத்தில் மாணவனை கிணற்றில் தள்ளி விட்ட, கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கிணற்றில் தவித்த சிறுவனை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

Update: 2016-12-26 22:15 GMT

சின்னமனூர்,

சின்னமனூர் அருகே தகாத உறவுக்கு மறுத்ததால், ஆத்திரத்தில் மாணவனை கிணற்றில் தள்ளி விட்ட, கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கிணற்றில் தவித்த சிறுவனை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

மாணவனிடம் தகாத உறவு

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9 வயது சிறுவன் 4–ம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால், நேற்று முன்தினம் மாலை வீட்டு முன்பு அந்த மாணவன் விளையாடிக் கொண்டிருந்தான். இந்த நிலையில் அவன் திடீரென்று காணாமல் போய்விட்டான். உடனே அவனை பெற்றோர் பல இடங்களில் தேடினர். பின்னர் இரவு நேரமாகியதால் அவர்கள் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.

இதையடுத்து நேற்று காலையில் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த பகுதியில் மீண்டும் தேடினர். அப்போது அந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள சுமார் 125 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இருந்து சிறுவனின் குரல் கேட்டது.

உயிருடன் மீட்பு...

அவர்கள் கிணற்றுக்குள் எட்டி பார்த்த போது தண்ணீர் எடுப்பதற்கு பொருத்தப்பட்ட குழாயை பிடித்து கொண்டு சிறுவன் இருந்தான். இதுகுறித்து உத்தமபாளையம் தீயணைப்பு படையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கிணற்றில் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி, சிறுவனை உயிருடன் மீட்டனர். தகவலறிந்த ஓடைப்பட்டி போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் காயம் அடைந்த சிறுவனை சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீஸ் விசாரணையில், சிறுவனை, அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் கொத்தனார் வேலை பார்க்கும் மணிவண்ணன் (27) என்பவர் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்று பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுவனின் ஆடைகளை அகற்றி, அவர் ஓரின சேர்க்கையில் ஈடுபட முயன்றதாக தெரிகிறது. இதனால் சிறுவன் அழுது சத்தம் போட்டுள்ளான். இதில் ஆத்திரம் அடைந்த மணிவண்ணன், சிறுவனை அந்த கிணற்றில் தள்ளி விட்டார். பின்னர் அவர் வீட்டிற்கு சென்றது தெரிய வந்தது. மேலும் சிறுவனின் பெற்றோருடன் சேர்ந்து, ஒன்றும் தெரியாததை போல், மணிவண்ணனும் தேடி இருப்பதும் தெரிய வந்தது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதற்கிடையே சிறுவனை உயிருடன் மீட்டதை மணிவண்ணன், அவன் உண்மைகள் அனைத்தையும் கூறிவிடுவான் என்று பயந்து, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்