சாத்தூர் அருகே பயங்கரம் பட்டாசு ஆலையில் தீவிபத்து; 3 பெண்கள் உடல் கருகி சாவு 5 பேருக்கு தீவிர சிகிச்சை

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் அதே இடத்தில் உடல் கருகி பலியானார்கள். 5 பேர் உயிருக்கான ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பட்டாசு ஆலை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை ரோட்டில் நார்ணாபுர

Update: 2016-12-26 23:00 GMT

சாத்தூர்,

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் அதே இடத்தில் உடல் கருகி பலியானார்கள். 5 பேர் உயிருக்கான ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பட்டாசு ஆலை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை ரோட்டில் நார்ணாபுரம் என்ற இடத்தில் ரமேஷ்கண்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு அனுமதி பெற்று நவீன ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. 23 அறைகளில் தினமும் 100– க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வந்தனர். வழக்கம்போல நேற்றும் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தனர். 11.30 மணி அளவில் ஒரு அறையில் பட்டாசு தயாரிக்கும்போது உராய்வு ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின.

3 பெண்கள் பலி

இதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த எலுமிச்சங்காய்பட்டி கிராமத்தை சேர்ந்த முனியசாமி என்பவரது மனைவி சுப்புத்தாய்(வயது40), முனியாண்டி என்பவரது மனைவி சரசுவதி(44), மாடசாமி என்பவரது மனைவி செல்வி(25) ஆகிய 3 பேரும் அதே இடத்தில் உடல் கருகி பலியானார்கள்.

மேலும் முருகன் என்பவரது மகன் மாமணிராஜ்(24), தாவீது என்பவரது மகன் செல்வராஜ்(28), முனியசாமி என்பவரது மகன் சூரியநாராயணசாமி(30), தம்பிராஜ் என்பவரது மனைவி வீரலட்சுமி(30), பழனிராஜ் என்பவரது மனைவி முத்துமாரி(50) ஆகிய 5 பேர் உடல் கருகினார்கள். இவர்கள் 5 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணை விபத்து குறித்து அறிந்ததும் சாத்தூரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். தனித்தனியாக அறைகள் இருந்ததால் மேலும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மற்ற அறைகளில் இருந்தோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

மாவட்ட வருவாய் அதிகாரி முத்துக்குமரன், கோட்டாட்சியர் கிருஷ்ணம்மாள், காவல் துணைகண்காணிப்பாளர் குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.

போராட்டம் இந்த நிலையில் சம்பவம் குறித்து அறிந்ததும் எலுமிச்சங்காய்பட்டி கிராமத்தினர் அங்கு குவிந்தனர். உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியதோடு இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப எதிர்ப்பு தெரிவித்தனர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியில் ஒவ்வொருவரது குடும்பத்துக்கும் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் வழங்கிட நிர்வாகத்தின் சார்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து மாலை 5 மணி அளவில் 3 பேரின் உடனும் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை அதிபர் ரமேஷ்கண்ணன், போர்மென் ஆரோக்கியராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்