திருவள்ளூர் அருகே மின்சாரம், குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருவள்ளூர் அருகே மின்சாரம், குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் வார்தா புயல் கடந்த 12–ந் தேதி கரையை கடந்தபோது திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு வச்சலா நகர், சீனிவாசா நகர், பாலாஜிநகர் உள்பட 10–க்கும் மேற்பட்ட

Update: 2016-12-25 22:15 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் அருகே மின்சாரம், குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

வார்தா புயல் கடந்த 12–ந் தேதி கரையை கடந்தபோது திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு வச்சலா நகர், சீனிவாசா நகர், பாலாஜிநகர் உள்பட 10–க்கும் மேற்பட்ட நகர்களில் மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. மரங்கள் சாய்ந்தன. இதனால் அந்த பகுதியில் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. சீரான குடிநீரும் வழங்கப்பட வில்லை. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடமும், மின் துறை அதிகாரிகளிடமும் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுவரை இந்த பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் நேற்று காலை திருவள்ளூர்– ஆவடி நெடுஞ்சாலை வேப்பம்பட்டில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

உடனடியாக மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். தகவல் அறிந்ததும் செவ்வாப்பேட்டை போலீசார், மற்றும் மின் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர். இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்