வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று முற்றுகை போராட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி

வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று (திங்கட்கிழமை) முதல் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். தலைக்குனிவு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மா

Update: 2016-12-25 22:30 GMT

திருச்சி

வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று (திங்கட்கிழமை) முதல் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

தலைக்குனிவு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கடந்த செப்டம்பர் மாதம் 22–ந்தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாள் முதலும், அவரது மறைவுக்கு பின்னும் தற்போது வரை தமிழகத்தில் அசாதாரண சூழல் உள்ளது. இந்த சூழலில் தமிழகத்தின் தலைமை செயலாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருப்பது தமிழகத்திற்கு பெரும் தலைக்குனிவு.

ராமமோகனராவ் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக அரசியல்வாதிகளை போல நாடகமாடி உடல் நலக்குறைவு எனக்கூறி தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உண்மையிலேயே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதா? என பரிசோதிக்க வேண்டும்.

விவசாயம் பாதிப்பு

ராமமோகனராவ், சேகர் ரெட்டி ஆகியோரது வீடுகளில் சோதனையின் போது ரகசிய டைரிகளை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்த டைரியில் குறிப்பிட்டுள்ளவர்களையும் கைது செய்ய வேண்டும். இதுவரை சோதனை நடத்தியதில் அவர்களிடம் இருந்து மொத்தம் பணம், தங்கம் எவ்வளவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ரூ.2 ஆயிரம் புதிய நோட்டு அவர்களுக்கு எப்படி வந்தது என விசாரிக்க வேண்டும்.

தமிழகத்தில் விவசாயம் பாதிப்பால் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளை பற்றி கவலைப்படாமல் தமிழக அரசு ஒரு அறிக்கை கூட விடாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. வார்தா புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமரை சந்தித்த முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக விவசாயிகள் பிரச்சினைகள், தற்கொலை தொடர்பாகவும் பேசி நிவாரண நிதி கேட்டிருக்கலாம்.

முற்றுகை போராட்டம்

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று (திங்கட்கிழமை) முதல் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்தியில் ஆளும் பா.ஜ.க. தமிழக அரசை வஞ்சிக்கிறது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற உச்சநீதிமன்றம் மீது பழிபோடுவதை தவிர்த்து மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும். மக்கள் நலக்கூட்டணி என்பது இல்லை. மக்கள் நலக்கூட்டு இயக்கம் மட்டுமே உள்ளது. மக்கள் பிரச்சினைகளில் ஒன்றிணைந்து போராடுவோம்.

சசிகலாவை சந்திக்கக்கூடாது

சசிகலாவை அரசு அதிகாரிகள் சென்று சந்திப்பதை தவிர்க்க வேண்டும். துக்கம் விசாரிக்க சென்றால் பரவாயில்லை. ஆனால் அவர்கள் அதற்கு சென்ற மாதிரி தெரியவில்லை. துணைவேந்தர்கள் சசிகலாவை சந்தித்தது தவறு. சசிகலாவும் தன்னை அரசு அதிகாரிகள் சந்திக்க விரும்ப கூடாது. தமிழகத்தில் கொள்கை அடிப்படையிலான திராவிட இயக்கங்கள் வலுப்பெற வேண்டும். நாட்டின் நலன் கருதியும், நாட்டு மக்களுக்காகவும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் இணைய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்து வருகிறோம்.

இவ்வாறு முத்தரசன் கூறினார்.

மேலும் செய்திகள்