கந்தர்வகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் வாலிபர் பலி
கந்தர்வகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதியதில், வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதில் சரக்கு ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். சரக்கு ஆட்டோ மோதல் அறந்தாங்கி அருகே உள்ள மூக்குடி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் கார்த்த
கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதியதில், வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதில் சரக்கு ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
சரக்கு ஆட்டோ மோதல்
அறந்தாங்கி அருகே உள்ள மூக்குடி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் கார்த்திக் ராஜ் (வயது 21). இவருடைய நண்பர் அதேபகுதியை சேர்ந்தவர் கோபால் (20). இவர்கள் 2 பேரும் நேற்று காலை ஒரு மோட்டார் சைக்கிளில் மூக்குடி கிராமத்தில் இருந்து தஞ்சாவூருக்கு சென்றனர். பின்னர் அதே மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி நேற்று மாலை வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கார்த்திக் ராஜ் ஓட்டினார். கோபால் பின்னால் அமர்ந்து வந்தார்.
கந்தர்வகோட்டை அருகே உள்ள சோழம்பட்டி என்ற இடத்தில் வந்தபோது, முன்னால் சென்ற ஒரு அரசு பஸ்சை கார்த்திக் ராஜ் முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே புதுக்கோட்டையில் இருந்து கந்தர்வகோட்டை நோக்கி வந்த சரக்கு ஆட்டோ, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளின் முன்சக்கரம் கழன்று சாலையில் ஓடியது.
வாலிபர் பலி
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கார்த்திக் ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கோபால், சரக்கு ஆட்டோ டிரைவர் கந்தர்வகோட்டை அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (27) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள், ஆதனக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் கந்தர்வகோட்டை தீயணைப்பு படைவீரர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் கார்த்திக் ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஆதனக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆறுமுகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.