செயற்கைகோள் தயாரித்து வெளிநாடுகளுக்கு வழங்க உள்ளோம் பெரம்பலூரில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

செயற்கைகோள் தயாரித்து வெளிநாடுகளுக்கு வழங்க உள்ளோம் என்று பெரம்பலூரில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார். 12 செயற்கை கோள் பெரம்பலூரில் நடந்த ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீசாரதாதேவி, சுவாமிவிவேகானந்தர் பக்தர்கள் மாநில மாநாடு நிறைவு விழாவிற்கு கலந்து கொள்

Update: 2016-12-25 22:30 GMT

பெரம்பலூர்

செயற்கைகோள் தயாரித்து வெளிநாடுகளுக்கு வழங்க உள்ளோம் என்று பெரம்பலூரில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

12 செயற்கை கோள்

பெரம்பலூரில் நடந்த ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீசாரதாதேவி, சுவாமிவிவேகானந்தர் பக்தர்கள் மாநில மாநாடு நிறைவு விழாவிற்கு கலந்து கொள்ள வந்திருந்த பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஒரு பிரிவான செயற்கை கோள் மைய இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இஸ்ரோ செயற்கை கோள் மையம் மூலம் மாதம் ஒரு செயற்கை கோள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 2016–ம் ஆண்டில் 12 செயற்கை கோள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்திய பல்கலைக்கழகங்களின் ஆய்வு பணிக்காக 4 செயற்கை கோள் உள்பட அனைத்து செயற்கைகோள்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பயன்பாடு கிடைத்துள்ளது.

சமீபத்தில் ஏற்பட்ட புயல் குறித்து முன்எச்சரிக்கை மிகத்துல்லியமாக சொல்லமுடிந்தது. இந்திய விவசாய நிலை, காட்டுவளம், கடல்பகுதியில் காற்று நிலை, காற்றின் திசை, காற்றின் ஈரப்பதம், வேகம் ஆகியவற்றை துல்லியமாக அறிந்து கொள்ள முடிகிறது. விண்வெளி ஆய்வு மண்டலத்தில் வெளிநாட்டு செயற்கை கோள் இல்லாமல், இந்தியாவிலேயே தயாரான நமது நாட்டு செயற்கை கோள் அனுப்பப்பட்டுள்ளது.

தொலைதொடர்பு மேம்பாட்டுக்காக இன்சாட்–15 மற்றும் இன்சாட்–18 ஆகிய 2 செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டுள்ளது. 7 செயற்கை கோள் இந்திய பிராந்திய கப்பல்படைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் நிலவளம், நீர்வளம், வான்வெளி மற்றும் புவியின் தட்பவெப்பநிலையை உடனுக்குடன் அறியமுடிகிறது.

வெளிநாடுகளுக்கு

2016–ம் ஆண்டில் பல செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி இருக்கிறோம். 2017–ம் ஆண்டில் புதிதாக செயற்கை கோள் தயாரிக்க உள்ளோம். அதனை விண்ணில் செலுத்தியபின் ஒரு தனிமனிதன் கூட தான் இருக்கும் இடத்தில் எப்படி விவசாயம் செய்வது, காற்றுவளம், மழைவளம், தட்பவெப்பநிலை, நீர்வளம் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும்.

இந்திய பல்கலைக்கழங்களில் பயிலும் மாணவர்கள் செயற்கோள் தயாரிப்பு திட்டங்களில் அதிகமாக பங்குகொண்டு இந்திய விண்வெளி மைய வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும். தனியார் நிறுவனங்களும் பங்கேற்கும் வகையில் இந்திய செயற்கை கோள் மையம் தனது பணியினை செய்து வருகிறது. இனிவரும் ஆண்டுகளில் செயற்கோள் தயாரித்து வெளிநாடுகளுக்கு வழங்கும் பணியில் ஈடுபட இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது, ஸ்ரீராமகிருஷ்ணா குழுமத்தலைவர் சிவசுப்ரமணியன், செயலாளர் விவேகானந்தன், இயக்குனர் டாக்டர் விஜய்ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்